‘மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்லத் தயார்’ - கமல்ஹாசன் திடீர் ஆலோசனை!

‘மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்லத் தயார்’ - கமல்ஹாசன் திடீர் ஆலோசனை!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்ல தயாராக இருப்பதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவருகிறது. கடந்த மாதம், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மாநில நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடந்தியிருந்தார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக, செயற்குழு உறுப்பினர்களுக்கு, கமல்ஹாசன்ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது, “நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க, கட்சியை வலிமைப்படுத்த வேண்டும். தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது, தனித்து நிற்பது என்பது குறித்து நான் பார்த்து கொள்கிறேன். நம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க ஒரு தொகுதிக்கு மூன்று என எனக்கு சாய்ஸ் இருக்கவேண்டும். அதற்கான வாய்பை கொடுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் சரியாக திட்டமிட்டு, கட்சியை பலப்படுத்துங்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்” இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

இதில், கட்சியின் செயற்குழு உறுப்பினர் (துணைத் தலைவர்) ஏ.ஜி.மெளரியா, ஊடகப்பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ், தொழிற்சங்க செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி, தலைமை மாநில செயலாளர் அர்ஜுனர், மாநில செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், கவிஞர் சினேகன்,மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் மாநில செயலாளர் மூகாம்பிகா ரத்தினம், மாதர் படை தலைவி சினேகா மோகன் தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in