`உண்மைகளை வெளியிட்டால் நீங்கள் வெளியே தலைகாட்ட முடியாது'- ஓபிஎஸ்சை மிரட்டும் ஆர்.பி.உதயகுமார்!

`உண்மைகளை வெளியிட்டால் நீங்கள் வெளியே தலைகாட்ட முடியாது'- ஓபிஎஸ்சை மிரட்டும் ஆர்.பி.உதயகுமார்!

“அதிமுகவை அழிப்பேன் எனச் சுயநலமாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் என்னைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். இந்த நிமிடம் வரை உங்களை அண்ணனாக மதித்து கருத்துகளைப் பேசி வருகிறேன். என்னை மிரட்டிப் பார்க்க நினைத்தால் உங்களைப் பற்றிய உண்மைகளை வெளியிட வேண்டியிருக்கும். இதனால் நீங்கள் வெளியே தலைகாட்ட முடியாத சூழல் ஏற்படும்” என ஆர்.பி. உதயகுமார் எச்சரித்துள்ளார்.

இது குறித்து நேற்று பேசிய ஆர்.பி.உதயகுமார், “அதிமுகவின் வரலாறு தெரியாத கோவை செல்வராஜ் போன்ற வடிகட்டிய முட்டாளை வைத்துக் கொண்டு தலைமை தாங்கும் ஓ. பன்னீர்செல்வம் நிலையைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. அதிமுக தொடங்கிய காலம் தொட்டு கட்சியின் கொள்கைக்காக உழைத்த குடும்பம், எங்களது குடும்பம். இந்த வரலாறு எல்லாம் ஓபிஎஸ் கைக்கூலியாக உள்ள கோவை செல்வராஜ் போன்றோருக்குத் தெரியாது. மதுரை சட்டக் கல்லூரியில் படித்த போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக செமஸ்டர் தேர்வைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவன் நான்.

இது ஜெயலலிதாவின் கவனத்திற்குச் சென்று, என்னை மாணவர் அமைப்பில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார். தொண்டர்களின் எதிர்காலம் குறித்து எந்த கவலையும் இல்லாமல் அதிமுகவை அழிப்பேன் எனச் சுயநலமாக இருக்கும் ஓபிஎஸ் என்னை சீண்டிப் பார்க்க வேண்டாம். திறந்த கதவோடு எத்தனை சோதனைக்கும் தயாராக இருக்கிறேன். கோவை செல்வராஜ் போன்ற கைக்கூலிகளை வைத்துக் கொண்டு என்னை மிரட்டிப்பார்த்தால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன்.

பொதுவாழ்வில் தூய்மையோடு உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஓபிஎஸ் வீட்டிலும் எனது வீட்டிலும் சொத்துக் குவிப்பு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி எனது வீட்டில் வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்துள்ளது தெரியவந்தால், நான் பொது வாழ்விலிருந்து விலகிவிடுகிறேன். அதுபோல் உங்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் பொது வாழ்க்கையிலிருந்து நீங்கள் விலகத் தயாரா? பூச்சாண்டி காட்டும் வேலைகளெல்லாம் என்னிடத்தில் வேண்டாம். கட்சி நலனுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் மட்டுமே நான் பேசிவருகிறேன். உங்களைப் போல சுய லாபத்திற்காகப் பேசவில்லை. இந்த நிமிடம் வரை உங்களை அண்ணனாக மதித்து கருத்துகளைப் பேசி வருகிறேன். என்னை மிரட்டிப் பார்க்க நினைத்தால் உங்கள் உண்மைகளை வெளியிட வேண்டியிருக்கும். இதனால் நீங்கள் வெளியே தலைகாட்ட முடியாத சூழல் ஏற்படும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in