`மக்களே சலிப்படைந்துவிட்டார்கள்'- ரெய்டு குறித்து ஆர்.பி.உதயகுமார் காட்டம்

`மக்களே சலிப்படைந்துவிட்டார்கள்'- ரெய்டு குறித்து ஆர்.பி.உதயகுமார் காட்டம்

எத்தனை முறைதான் சோதனை நடத்துவது என்று மக்களே சலிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தினர். பல மணி நேர ஆய்வுக்கு பிறகு மாலையில் சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, "லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மூலம் மின் கட்டண உயர்வை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். நெருங்கிய நண்பர்கள் என்று சிலர் வீட்டில் சோதனை மேற்கொண்டார்கள். ஆனால் அவர்கள் யாரென்றே எனக்கு தெரியாது. எந்த ஆதாரமும் இல்லாமல் 3-வது முறையாக சோதனை நடைபெற்றுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் எதுவும் கைப்பற்றப்படவில்லை" என்றார்.

இதனிடையே, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "அதிமுகவை பழிவாங்கும் நோக்கத்திலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் தான் சோதனைகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய காவல்துறையினர், இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். திரும்பத் திரும்ப அரசியல் காழ்புணர்ச்சியோடு எத்தனை முறை சோதனை நடத்துவது என்று மக்களே சலிப்படையும் அளவுக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது" என்று கொந்தளித்தார் உதயகுமார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in