`எடப்பாடியார் மீது அமைச்சர்கள் வார்த்தைகளை கொட்டுகிறார்கள்'- வேதனைப்படும் ஆர்.பி.உதயகுமார்

`எடப்பாடியார் மீது அமைச்சர்கள் வார்த்தைகளை கொட்டுகிறார்கள்'- வேதனைப்படும் ஆர்.பி.உதயகுமார்

"நாட்டின் அவலங்களை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சித்தலைவர் அறிக்கைகளை அமைச்சர்கள் ஏகடியம், ஏளனம் செய்யக்கூடாது. ஆளுங்கட்சி என்பது கொதிக்கிற பானை அதை பக்குவப்படுத்துவது தான் எதிர்க்கட்சியின் வேலை" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு செக்கானூரணி, சாத்தங்குடி ஆகிய பகுதியிலுள்ள அரசு பள்ளிகளில் தேசியக் கொடியினை ஏற்றி, பல்வேறு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை சட்டமன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வழங்கினார்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், "நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கல்வி, உணவு, உற்பத்தி, பொருளாதாரம் ஆகியற்றில் 15% தான் இருந்தோம். தற்போது, நாம் முன்னேறி வருகிறோம், வருகின்ற 100-வது சுதந்திர தின விழாவில் நாம் 100% அடைந்து விடுவோம்‌. மேலும், இந்தியா வல்லரசு நாடுகளுக்கு, வழிகாட்டும் வகையில் முதன்மை தேசமாக உருவாகும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாணயத்தின் இருபக்கங்களாக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இருக்க வேண்டும். இதில், ஒரு பக்கம் மட்டும் இருந்தால் அந்த நாணயமே செல்லாது. பேரறிஞர் அண்ணா கூறுவார். ஆளுங்கட்சி என்பது கொதிக்கும் பானை, அதைப் பக்குவப்படுத்தி பதம் பார்க்கும் அகப்பையாக இருப்பது தான் எதிர்க்கட்சி வேலை. அதுபோலத்தான் ஆளுங்கட்சிகளின் குறைகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடியார் அறிக்கை விடுகிறார். ஆனால், அதற்கு அமைச்சர்கள் நாகரிகம் அற்ற முறையில் பேசுகின்றனர். இதற்கு அரசியல் நடுநிலையாளர்கள், ஆய்வாளர்கள் எல்லாம் ஜனநாயகம் செத்துவிட்டாதா என்று வேதனை அடைந்து வருகின்றனர்.

வேளாண் துறையில் உள்ள அவலங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சுட்டி காட்டினால், அதற்கு அமைச்சர் வார்த்தையை கொட்டுகிறார். போதை பொருள் அதிகரித்து விட்டது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கூறும் போது, அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் கொந்தளித்து பேசியது அவர் இயலாமை காட்டுகிறது. குறிப்பாக மூன்று பள்ளி மாணவிகள் போதை மருந்தில் தள்ளாடிய காட்சிகளை ஊடகங்களில் வெளிவந்தன,.அதனை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டும் பொழுது கோபப்படுகிறார். இந்த நிலையை அரசு கவனிக்கவில்லையா என்று தான் தோன்கிறது. மேலும், அமைச்சர் கடந்த 10 ஆண்டுகளில் போதை பொருள் குறித்து ஒப்பிட்டு பேச முடியுமா என்று கூறுகிறார். தற்போது, தமிழகத்தில் 38 வருவாய் மாவட்டங்கள் உள்ளன. கடந்த அம்மா ஆட்சி காலங்களில் கல்லூரிகள், பள்ளிகளில் இது போன்ற வேதனையான சம்பவங்கள் நடைபெற்றது உண்டா?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், "நீங்கள் ஆய்வு செய்து பாருங்கள் கடந்த 10 ஆண்டுகளில் போதைப் பொருள்கள் அதிகரித்ததில்லை. நீங்கள் சர்வே செய்தால் கடந்த ஒன்னறை ஆண்டுகளில் தான் அதிகரித்து உள்ளது என்ற விடை தான் கிடைக்கும். மேலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் தார்மீக அடிப்படையில், நாட்டில் நடக்கும் அவலங்களை புள்ளி விபரத்துடன் சுட்டிக்காட்டும் பொழுது அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சுகாதாரத்துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர், தொழில்த்துறை, உணவுத்துறை அமைச்சர், நிதி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் எல்லாம் எகத்தாளம், ஏகடியம், அதிகாரத்துடன் பேசுவதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதிர்க்கட்சி தலைவரின் அறிக்கையை அமைச்சர்கள் உள்வாங்கி அதற்கு அரசு தீர்வு காண வேண்டும். அமைச்சர்கள் எகத்தாளம், ஏகடியம், மமதையுடன் பேசுவதை ஜனநாயகம் மன்னிக்காது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கூறியதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நீங்கள், மக்கள் கூறுவதை எப்படிக் கேட்பீர்கள். உங்கள் மீது அரசியல் காழ்புணர்சசி காரணமாக எந்த குற்றச்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் வைக்கவில்லை. நாட்டின் நடக்கும் அவலங்களை தான் சுட்டிக்காட்டுகிறார், அதற்கு சரி செய்கிறோம் என்று கூறுங்கள். இல்லையென்றால் நாங்கள் சர்வாதிகாரியாக பேசுவோம் என்று கூட கூறுங்கள்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை பார்த்து அருகதை இல்லை என்று கூறுகிறீர்கள். உங்களுக்கு எப்படி அருகதை உள்ளதோ அதேபோல் மக்களின் குறைகளை சுட்டிக்காட்ட எங்களுக்கு அருகதை உள்ளது அதை எங்களுக்கு மக்கள் வழங்கி உள்ளார்கள். இனிமேலாவது அமைச்சர்கள் மமதையுடன் பேசாமல் உரிய பதிலை மக்களுக்கு வழங்க வேண்டும். அதை விட்டுவிட்டு தங்களின் தவறுகளை திசைதிருப்ப கேலி, கிண்டல், தலைகணத்துடன் அமைச்சர்கள் பேசி வருவது அநாகரீகத்தின் உச்சமாகும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in