ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் நாளையே தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.
சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகமெங்கும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனியில் இன்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் தேனி பங்களாமேடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓபிஎஸ் இல்லாமல் அதிமுகவில் தேனியில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது பேசிய ஆர்.பி. உதயகுமார், "தற்போது ஓபிஎஸ், கட்சியில் உள்ள நிர்வாகிகளை நீக்கி வருகிறார். இதைப் பார்த்தால் இறுதியில் ஓபிஎஸ் மற்றும் அவருடன் இருக்கும் சில பேர் மட்டுமே எஞ்சியிருப்பர். அதிமுக தலைமைக் கழக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் கண்ணில் ரத்தம் வர வைக்கிறது. உங்கள் வீட்டை சூறையாட எவ்வளவு நேரமாகும் எனத் தெரியவில்லை. அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட பின் உடனடியாக வருவாய்த் துறையினர் வந்து சீல் வைத்தது எப்படி? பத்து வருடங்களாக வருவாய்த் துறை அமைச்சராக இருந்த நான் அவ்வளவு விரைவாகச் செயல்பட்டதில்லை. ரவுடிகளுடன் அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்தவர்கள் கொள்ளையர்கள். அவர்கள் அங்கிருந்த பொருட்கள், ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர்" என்றார்.
மேலும், "முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பின் போது ஓபிஎஸ், 11 நாட்கள் மௌன விரதம் இருந்தார். அதனால், 5 சதவீத வாக்கு குறைந்தது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கவே தயங்கினார். அவருடைய போடி தொகுதியைத் தவிர பக்கத்துத் தொகுதிக்குக் கூட சென்று அவர் பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.
சேலம், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் உயர்மட்ட மேம்பாலங்கள் என கடந்த நான்கு ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மூன்று முறை முதலமைச்சர், ஒரு முறை துணை முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் தேனியில் ஒரு மேம்பாலம் கூட கட்டவில்லை. ஓபிஎஸ் மட்டும் வீடு மேல் வீடு, காடு மேல் காடு, தீவு என சொத்து சேர்த்தார். பொதுக்குழு கூடிய போது தேனி மாவட்டம் முழுவதும் வந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்தனர். அவர், தேனி வரும் போது இதே போல அலைகடலென திரண்டு வரவேற்பளிக்க காத்திருங்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் ஓடி ஒளிந்து கொள்வார். அவருக்குப் பதவி பறிபோகிறது என்றால் தர்மயுத்தம் நடத்துவார். அவரின் துரோகத்தை மக்கள் எளிதில் அடையாளம் கண்டுவிட்டார்கள். இங்கே இருக்கக்கூடிய தொண்டர்களுக்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தின் வெற்றிக்கு யார் பாடுபட்டது என்று தெரியும். அவருக்குத் தைரியம் இருந்தால் நாளையே அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுக் காட்டட்டும். அப்படி நடந்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்” என சவால் விடுத்த அவர், “அதிமுகவில் இனி ஓ.பன்னீர்செல்லத்திற்கு வேலை இல்லை. தேனியிலும் வேலை இல்லை. சென்னையிலும் அவருக்கு இனி வேலை இல்லை. நிச்சயம் பன்னீர்செல்வம் தேனியை காலி செய்து சென்றுவிடுவார்" என்றார்.