ஓபிஎஸ்சிடமிருந்த எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியும் பறிப்பு: தொடரும் ஈபிஎஸ்சின் அதிரடி நடவடிக்கை

ஓபிஎஸ்சிடமிருந்த எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியும் பறிப்பு: தொடரும் ஈபிஎஸ்சின் அதிரடி நடவடிக்கை

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் ஆர்.பி.உதயகுமாரும், எதிர்க்கட்சி துணைச்செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்த நிலையில் அதனை ஏற்காமல் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களைக் கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டாலும் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத் தலைவராக சட்டப்பேரவையில் இருந்து வருகிறார். அந்த பதவியும் பறிக்கப்படலாம் என்ற பேச்சு கடந்த சில நாட்களாக இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார், எதிர்க்கட்சி துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.

இதனைச் சட்டப்பேரவை செயலகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர். அதில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களை அங்கீகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே இத்தகைய எந்த மாறுதலையும் ஏற்கக்கூடாது என்று ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் கொடுத்துள்ளார். தற்போது எடப்பாடி பழனிசாமியும் கடிதம் கொடுத்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் இந்த இருவரின் வேண்டுகோள்களில் யாருடையது ஏற்றுக் கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தப் பதவியை வகித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சமூகத்தைச் சேர்ந்தவரும், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப் போராட்டங்கள் மூலமாக ஓ.பன்னீர்செல்வம் அப்பதவியில் இனியும் தொடர்வாரா? அல்லது இனி உதயகுமார் அலங்கரிப்பாரா என்பது அடுத்து வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தெரிந்து விடும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in