ஆதவை ஆதரிக்கும் திருமா... ரவிக்குமாருக்கு மீண்டும் சீட் கிடைப்பதில் சிக்கல்?

ரவிக்குமார் எம்.பி
ரவிக்குமார் எம்.பி

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனாவுக்கு இம்முறை எப்படியும் சீட் கொடுக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். ஆதவுக்கு சீட் ஒதுக்கும் பட்சத்தில் விசிக-வின் சிட்டிங் எம்பி-யான ரவிக்குமாருக்கு சீட் கிடைக்காமல் போகலாம் என்கிறார்கள் விசிக வட்டாரத்தில்.

திமுக கூட்டணியில் கடந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிட்டது விசிக. அதன்படி சிதம்பரத்தில் திருமாவளவனும் விழுப்புரத்தில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் வெற்றி பெற்றார்கள். இதில், ரவிக்குமார் உதயசூரியனில் போட்டியிட்டு வென்றார். இம்முறை திமுகவிடம் மூன்று தொகுதிகளை எதிர்பார்க்கிறது விசிக. அதில் ஒன்று பொதுத் தொகுதி.

ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜூனா

கட்சியின் அண்மை வரவான ஆதவ் அர்ஜூனாவுக்காகவே பொதுத் தொகுதி ஒன்றை இம்முறை பிடிவாதமாகக் கேட்கிறார் திருமா. திமுக தரப்பிலும் பலவிதத்திலும் நல்ல நட்புறவில் இருக்கும் ஆதவ், நேரடியாக ஸ்டாலினிடமே பேசி தனக்காக கள்ளக்குறிச்சி தொகுதியை ரிசர்வ் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

திருமாவளவன்
திருமாவளவன்

கள்ளக்குறிச்சி தொகுதியில் தற்போது முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதமசிகாமணி எம்பி-யாக இருக்கிறார். செம்மண் குவாரி வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணையில் இருக்கிறார் கௌதமசிகாமணி. இப்படியான சூழலில் அவருக்கு மீண்டும் சீட் கொடுத்து சிக்கலை வளர்க்க விரும்பாத ஸ்டாலினும் ஆதவுக்கு கள்ளக்குறிச்சியை விட்டுக்கொடுக்க சம்மதித்திருப்பதாக தெரிகிறது.

ஆதவுக்கு சீட் கொடுக்க ஒத்துக்கொண்டாலும் விசிகவுக்கு இம்முறை 3 தொகுதிகளைக் கொடுக்க சம்மதிக்கமாட்டார் ஸ்டாலின் என்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்கெனவே வழங்கிய தொகுதிகளை குறைக்கமுடியுமா என திமுக சிந்தித்து வருகிறது. இந்த நிலையில், விசிகவுக்கு மட்டும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கினால் மற்ற கட்சிகளும் அதையே சாக்காக வைத்து கூடுதல் தொகுதிகளை கேட்டு கொடிபிடிக்கும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

எனவே, விசிகவுக்கு 3 தொகுதிகள் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அப்படி ஒருவேளை, மூன்று தொகுதிகள் கிடைக்காமல் போனால் ரவிக்குமாருக்கு இம்முறை சீட் கிடைப்பது சிக்கலாகி விடும். இதனால் கட்சிக்குள் தேவையற்ற பிரச்சினைகள் வெடிக்கலாம் என திருமா கருதினால், தான் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு அந்த இடத்தை ரவிக்குமாருக்கு வழங்க முன்வரலாம். ஆனால், அத்தகைய முடிவை திருமா எடுப்பாரா என்பது சந்தேகம் தான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in