சர்வர் பிரச்சினை: ரேஷன் ஊழியர்கள் போராட்டம்!

சர்வர் பிரச்சினை: ரேஷன் ஊழியர்கள் போராட்டம்!
மதுரையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்... படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

நீண்ட நாட்களாக இருக்கிற சர்வர் பிரச்சினையை சரிசெய்யாமல் ரேஷன் கார்டை ஸ்கேன் செய்தும், கார்டு எண்ணை பதிவு செய்தும் பொருட்களை வழங்க வேண்டும் என்று ஊழியர்களை நெருக்கும் தமிழக அரசை கண்டித்து தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு கூட்டுறவு ஊழியர் சங்க புறநகர் மாவட்ட செயலாளர் முனியாண்டி தலைமை தாங்கினர்.

கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு கூட்டுறவு சங்க ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் இரா.லெனின், பொருளாளர் துரைப்பாண்டி ஆகியோர் பேசுகையில், "தமிழக அரசின் உணவுத்துறை, கூட்டுறவுத்துறையின் கீழ் பணியாற்றும் நியாய விலைக் கடை பணியாளர்களை கொத்தடிமைகளைப் போல் நடத்துவதை கைவிட வேண்டும். தினசரி அறிவிப்பு போல, புதுப்புது உத்தரவுகளை வழங்கி நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு பணிச்சுமையை அதிகரிக்கக் கூடாது. நீண்ட நாட்களாக உள்ள சர்வர் பிரச்சினையை சரிசெய்து பொதுமக்களுக்கு தடையின்றி பொருட்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு அரசு அறிவிக்கின்ற வருடாந்திர, ஊதிய உயர்வு, புதிய ஊதிய உயர்வு, தேர்வு நிலை சிறப்பு தேர்வு நிலை, கூடுதலான பணிக்கு உண்டான ஊதியம் போன்றவை ஊழியர்களைச் சென்றடைவதில்லை. எனவே, இது மாவட்டம் முழுவதிலும் உள்ள நியாய விலைக்கடை பணியாளர்களின் கைக்குச் சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

பல கூட்டுறவு சங்கங்களில் தற்போது உள்ள நிர்வாகங்கள் அரசு உத்தரவினை நடைமுறைப்படுத்தாமல் தாமதப்படுத்தி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவின்படி பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்களுக்கு துணை விதி திருத்தம் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும். பணியின் போது இறக்கும் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்” என்றனர்.

சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் இரா.தெய்வராஜ், புறநகர் மாவட்ட நிர்வாகி ஆஞ்சி ஆகியோர் பேசுகையில், அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் கழிப்பிட வசதி, அரசு ஊழியர்களுக்கு இணையான 31 சதவீத அகவிலைப்படி, சிறப்பு பணி ஊக்கத்தொகையாக கார்டு ஒன்றிற்கு ரூ.10 போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Related Stories

No stories found.