
பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபவர்களின் வீடுகள் இடிக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் குற்றவாளிகள் தூக்கில் போடப்படுவார்கள் என்றும் மத்திய பிரதேச மாநிலம் முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அண்மையில் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. மேலும் காஷ்மீர், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
அண்மையில் மத்தியபிரதேச மாநிலத்தில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அம் மாநில முதல்வர் சிவராஜ் சவுகான், பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபவர்களின் வீடுகள் இடிக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் குற்றவாளிகள் தூக்கில் போடப்படுவார்கள் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.