‘வாயை மூடு’ - பத்திரிகையாளரை எச்சரித்த பாபா ராம்தேவ்!

எரிபொருள் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பியதால் கோபம்
‘வாயை மூடு’ - பத்திரிகையாளரை எச்சரித்த பாபா ராம்தேவ்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை ஆன்மிக குரு பாபா ராம் தேவ் கடுமையாக எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹரியாணா மாநிலம் கர்னால் பகுதியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் கலந்துகொண்டார்.

அப்போது எரிபொருள் விலை உயர்வு குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். பாஜகவின் தீவிர ஆதரவாளரான ராம்தேவ், எரிபொருள் விலை உயர்வுக்குப் பல்வேறு காரணங்களைச் சொல்லி மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசினார்.

“எரிபொருள் விலை குறைவாக இருந்தால், வரி கிடைக்காது என அரசு சொல்கிறது. அப்படி இருந்தால் எப்படி அவர்கள் நாட்டை நிர்வகிக்க முடியும்? எப்படி சம்பளம் கொடுக்க முடியும்? எப்படி சாலைகள் போட முடியும்?” என்று கேள்வி எழுப்பிய ராம்தேவ், “விலைவாசி உயர்ந்திருக்கிறதுதான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மக்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நான் கூட காலை 4 மணிக்கு எழுந்து இரவு 10 மணி வரை உழைக்கிறேன்” என்றார்.

அப்போது, 'பெட்ரோல் விலையை 40 ரூபாயாகவும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 300 ரூபாயாகவும் வழங்க உறுதி தரும் அரசைக் கொண்டுவர வேண்டும்' என்று, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பாபா ராம் தேவ் பேசியதைச் சுட்டிக்காட்டி ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.

உடனே, “ஆமாம். அப்படித்தான் சொன்னேன். உன்னால் என்ன செய்ய முடியும்? இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்காதே. உன் கேள்விக்குப் பதில் சொல்ல நான் என்ன உன் ஒப்பந்ததாரரா என்ன?” என்று ராம்தேவ் ஒருமையில் பேசி பத்திரிகையாளரைக் கடிந்துகொண்டார்.

அதே கேள்வியை அந்தப் பத்திரிகையாளர் மீண்டும் கேட்டதும் மேலும் கோபமடைந்த ராம்தேவ், “நான் முன்பு அப்படிச் சொன்னேன். அதற்கு இப்போது நீ என்ன செய்துவிடுவாய்? வாயை மூடு. திரும்பவும் இப்படிக் கேள்வி கேட்டால், அது நல்லது அல்ல. இப்படியெல்லாம் பேசாதே. கண்ணியமான பெற்றோரின் மகனாக நடந்துகொள்” என்று அந்தப் பத்திரிகையாளரை மிரட்டினார். அவருடன் சேர்ந்து அவரது ஆதரவாளர்களும் அந்தப் பத்திரிகையாளரை எச்சரித்தனர்.

Related Stories

No stories found.