சசி தரூருக்கே ஆங்கில வகுப்பெடுத்த அதாவலே: ட்விட்டரில் ஒரு நகைச்சுவை மோதல்!

சசி தரூருக்கே ஆங்கில வகுப்பெடுத்த அதாவலே: ட்விட்டரில் ஒரு நகைச்சுவை மோதல்!
ராம்தாஸ் அதாவலே

யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். ஆங்கிலப் புலமை கொண்டவர்களே அறிந்திராத பல அரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அசரடிக்கும் திறன் கொண்ட காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விஷயத்தில் அது உண்மையாகியிருக்கிறது.

விஷயம் இதுதான்.

“பட்ஜெட் விவாதத்தின்போது கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பதில் உரை. ஸ்தம்பித்துப்போய், நம்ப முடியாத ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் முகபாவத்துடனான அமைச்சர் ராம்தாஸ் அதாவலேயின் முகமே எல்லாவற்றையும் சொல்கிறது: பொருளாதாரத்தைப் பற்றியும் தனது பட்ஜெட் பற்றியும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லும் விஷயங்களை ட்ரெஷரி பெஞ்ச்சில் இருப்பவர்களால் கூட நம்ப முடியவில்லை!” என்று நேற்று ட்வீட் செய்திருந்தார் சசி தரூர் (இந்திய நாடாளுமன்ற நடைமுறையைப் பொறுத்தவரை ட்ரெஷரி பெஞ்ச் என்பது, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி-க்கள் அமரும் இடம் ஆகும்!)

அதில் ராம்தாஸ் அதாவலேயின் முகபாவத்தை அவர் கிண்டல் செய்திருந்த விதம் காங்கிரஸ் தரப்பில் கலகலப்பையும் ஆளுங்கட்சிக் கூட்டணி தரப்பில் கடுப்பையும் ஏற்படுத்தியிருந்தது. எனினும், அதில் சசி தரூர் பயன்படுத்தியிருந்த வார்த்தைகள் சற்றுக் குழப்பமாக / தவறாக எழுதப்பட்டிருப்பதாகவே ட்விட்டர்வாசிகள் நினைத்தனர். உதாரணத்துக்கு, /Nearly two-hour rely to the Bydget debate/ என அவர் எழுதியிருந்ததை - ‘பட்ஜெட் விவாதத்தின்போது கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பதில் உரை’ எனக் குத்துமதிப்பாகத்தான் ட்விட்டர்வாசிகள் புரிந்துகொண்டனர்.

சசி தரூர்
சசி தரூர்

இந்நிலையில், சசி தரூரின் ட்வீட்டில் இருந்த எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டி அவரைக் கடுமையாகக் கிண்டல் செய்திருக்கிறார் ராம்தாஸ் அதாவலே.

“அன்புள்ள சசி தரூர் ஜி. அநாவசியமான வார்த்தைகளைப் பேசும்போது தவறுகளைச் செய்தே ஆவார்கள் என்று சொல்வார்கள். அது Bydget அல்ல, BUDGET. அதேபோல், அது rely அல்ல, reply. அதுசரி, எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது!” என்று நகைச்சுவையுடன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து, சசி தரூரையே பிரித்து மேய்ந்திருக்கிறாரே என ட்விட்டர்வாசிகள் சிரித்து மாய்கிறார்கள்.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சருமான ராம்தாஸ் அதாவலே, நகைச்சுவைப் பேச்சுகளுக்குப் பெயர்போனவர். இந்தியக் குடியரசுக் கட்சி (அ) எம்.பி-யான அவர் பாஜக கூட்டணி அரசில் இணையமைச்சர் பொறுப்பை வகிக்கிறார். 2019 ஜூன் 19-ல் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தின்போது, ராகுல் காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் சாக்கில் காங்கிரஸ் கட்சியையும் அவர் கடுமையாகக் கிண்டல் செய்ய, பிரதமர் மோடி மட்டுமல்லாமல் சோனியா காந்தியும் வாய்விட்டுச் சிரித்தது குறிப்பிடத்தக்கது.

ஆக, ஆள் தெரியாமல் அம்பு விட்டிருக்கிறார் சசி தரூர்!

Related Stories

No stories found.