இட ஒதுக்கீட்டை வென்றெடுக்காமல் ஓயமாட்டேன்- ராமதாஸ் சூளுரை

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக இன்னும் ஒரு மாதத்திற்குள் நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை மூலம் அவர் தெரிவித்துள்ளதாவது, 'பிரிந்து கிடந்த வன்னியர் அமைப்புகளையெல்லாம் ஒன்று திரட்டி, வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 1980-ஆம் ஆண்டில் தொடங்கி சமூக நீதி போராட்டத்தை முன்னெடுத்தேன். அதைத் தொடர்ந்து நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில்  காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், மிகக் கொடிய தாக்குதல்களிலும் நமது பாட்டாளி சொந்தங்கள் 21 பேர் விலைமதிப்பற்ற இன்னுயிரை தியாகம் செய்தனர்.

அவர்கள் செய்த ஈகத்தின் பயனாகத் தான் 1989-ஆம் ஆண்டு வன்னியர்கள் உள்ளிட்ட 108 சாதிகளை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு என்ற புதிய பிரிவை உருவாக்கி அதற்கு 20% இட ஒதுக்கீட்டை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் வழங்கினார். ஆனால், போராடிப் பெற்ற அந்த இட ஒதுக்கீட்டின் பயன்கள் போராடிய சமுதாயத்திற்கே கிடைக்காததைத் தொடர்ந்து தான் மீண்டும் ஓர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை நடத்தி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் வன்னியர்களுக்கு மட்டும் 10.50% இட ஒதுக்கீட்டை வென்றெடுத்தோம்.

ஆனால், சமூகநீதிக் குருடர்கள் சிலர் செய்த சதியால் அந்த இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தேன். அந்த வழக்கில் தான் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை; அதற்கான சட்டத்தை அரசு நிறைவேற்றலாம் என்று உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியது.

நமது தரப்பு நியாயத்தை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வன்னியர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதை தமிழக சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் வாக்குறுதியாக அளித்திருக்கிறார்.

உச்சநீதிமன்றம் வழிகாட்டியவாறு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்த தரவுகளை திரட்டவும், அதனடிப்படையில் உள் இட ஒதுக்கீடு குறித்து அரசுக்கு பரிந்துரைக்கவும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. 

அதற்காக ஆணையத்திற்கு முதலில் 3 மாதங்கள், பின்னர் 6 மாதம் என ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டுள்ள 9 மாத காலக்கெடு, இன்னும் ஒரு மாதத்திற்குள், அதாவது அடுத்த மாதம் 11-ம் நாள் நிறைவடைகிறது. அதற்குள் நமக்கு நல்ல செய்தி கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

2022, 2023 ஆகிய ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. நமது உரிமையான சமூகநீதியை வென்றெடுப்பதில் செய்யப்படும் காலதாமதம் கோபத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை தான். வன்னியர் இட ஒதுக்கீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் நான் அளிக்கும் வாக்குறுதி. ''பாட்டாளி மக்களான வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை வென்றெடுத்து கொடுக்காமல் ஓயமாட்டேன்'' என்பது தான்.

ராமதாஸ்
ராமதாஸ்

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த கவலை பாட்டாளி சொந்தங்களுக்கு தேவையில்லை. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை நாம் வென்றெடுத்தே தீருவோம். இது உறுதி' என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in