ராமதாஸ் எச்சரிக்கை, அண்ணாமலை கவலை!

ராமதாஸ் எச்சரிக்கை, அண்ணாமலை கவலை!

தமிழகத்தில் காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் எச்சரிக்கையும், கவலையையும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தமிழகத்தில் சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. 3 நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறுவது மட்டுமே போதுமானதல்ல. காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம். பள்ளிகளில் குழந்தைகள் நெருக்கமாக அமர்ந்திருப்பதாலும், ஒன்று கூடி விளையாடுவதாலும் காய்ச்சல் பரவுகிறது என்பதை மருத்துவ வல்லுநர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.

புதுச்சேரியில் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்கு குழந்தைகளிடையே காய்ச்சல் பரவுவது குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டுமானால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டியது அவசியமாகும். மாணவர்களுக்கு கல்வி அவசியம்; அவர்களின் உடல்நலனைக் காக்க வேண்டியது மேலும் அவசியம். இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. எனவே, 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்; மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னையில் பல மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு மருத்துவர்களின் உதவியோடு மாணவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும்.

H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் குறையும் வரை பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். நோய் பரவலைத் தடுப்பதற்கு மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டுமென்று பாஜக சார்பாகப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in