‘இந்துக்களுக்கு மட்டுமல்ல, ராமர் அனைவருக்கும் சொந்தமானவர்’ - ஃபரூக் அப்துல்லா அதிரடி!

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா

மதப் பிளவை உருவாக்கி கட்சியை பலவீனப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவருமான ஃபரூக் அப்துல்லா எச்சரித்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஃபரூக் அப்துல்லா, “இந்துக்கள் ஆபத்தில் உள்ளனர் என்று வார்த்தைகளை தேர்தல் நேரத்தில் அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் அதற்கு இரையாக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்து மதத்தினருக்கு மட்டும் அல்ல, ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். எந்த மதமும் கெட்டது அல்ல, மனிதர்கள்தான் ஊழல் செய்கிறார்கள், மதம் அல்ல. தேசிய மாநாடு கட்சி ஒருபோதும் பாகிஸ்தானின் பக்கம் நிற்கவில்லை. ஜின்னா எனது தந்தையை சந்திக்க வந்திருந்தார், ஆனால் அவருடன் கைகோர்ப்பதை நாங்கள் மறுத்தோம்." என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று மத்திய அரசை தாக்கிய அவர், “ ஜம்மு காஷ்மீருக்கு 50,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று மத்திய அரசால் வாக்குறுதி அளிக்கப்பட்டது, அவை எங்கே?. எங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் வேலையில்லாமல் உள்ளனர். ஒரு ஆளுநரால் இதைச் செய்ய முடியாது, நீங்கள் அவரைப் பொறுப்பேற்கச் சொல்ல முடியாது. எனவே தேர்தல் நடத்துவது முக்கியமானது. ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்போம். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மீண்டும் ஒரே அமைப்பாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்றார்.

2019 ஆகஸ்டில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்து, அதனை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இங்கு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in