`18 வருஷமா கட்சியில் இருக்கிறேன்; எனக்கு தகுதியில்லையா?'- சீட் கிடைக்காததால் நக்மா வேதனை

`18 வருஷமா கட்சியில் இருக்கிறேன்; எனக்கு தகுதியில்லையா?'- சீட் கிடைக்காததால் நக்மா வேதனை

மாநிலங்களவை சீட் கிடைக்காததால் மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நடிகை நக்மா வேதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 18 பேரும் அடங்குவார்கள். இவர்களில், 6 பேரின் பதவிக்காலம் ஜூன் 29-ம் தேதி முடிவடைகிறது. தி.மு.க.வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதேபோல், மேலும் 14 மாநிலங்களை சேர்ந்த 51 உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிகிறது. எனவே, மொத்தம் உள்ள 57 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 10-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகா மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதேபோல் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படுகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அதன்படி காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, மாநிலங்களவை சீட் கிடைக்காததால் மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நடிகை நக்மா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "கட்சியில் இணைந்தபோது மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என சோனியா காந்தி உறுதி அளித்திருந்தார். கட்சியில் இணைந்து 18 ஆண்டுகளாகியும் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மாநிலங்களவை வாய்ப்புக்கு எனக்கு தகுதி இல்லையா" என கேள்வி எழுப்பியுள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நக்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in