‘மீன், பன்றி என எதையோ சாப்பிடுங்கள்; அதை ஏன் பொதுவில் காட்ட வேண்டும்’ தேஜஸ்வி மீது பாயும் ராஜ்நாத் சிங்

மீனுடன் தேஜஸ்வி யாதவ் - ராஜ்நாத் சிங்
மீனுடன் தேஜஸ்வி யாதவ் - ராஜ்நாத் சிங்

உணவு அரசியலில் அடுத்த தாக்குதலாக, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது பாஜக மூத்த தலைவரான ராஜ்நாத் சிங் பாய்ந்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் உணவு அரசியல் மீண்டும் சூடு பிடித்துள்ளது. அண்மையில் ஆர்ஜேடி தலைவரும் பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மீன் உண்ணும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதனை முன்வைத்து அரசியல் சர்ச்சை ஒன்று புதிதாக எழுந்தது. ’இந்துக்களின் புனித வழிபாட்டுக் காலத்தில் அசைவ உணவை, அரசியல் தலைவர் ஒருவர் பொதுவெளியில் ஏன் பரப்ப வேண்டும்’ என பாஜகவினர் தேஜஸ்விக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

அவர்களின் வரிசையில் இன்றைய தினம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங்கும் இணைந்துள்ளார். பீகார் மாநிலம் ஜமுய் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், “நீங்கள் மீன், பன்றி அல்லது யானையை வேண்டுமானால் உண்ணலாம். அஅனால் அவற்றை பொதுவில் காட்டுவதன் மூலம், நீங்கள் நிரூபிக்க முயல்வது என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

”இதன் மூலம் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் நினைக்கிறாரா? லாலு பிரசாத் யாதவ் தனது மகனை சற்று முறையாக கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று ராஜ்நாத் சிங் முடித்திருந்தார். கூட்டணி கட்சியின் தலைவரான முகேஷ் சஹானி என்பவருடன் தேஜஸ்வி யாதவ் தோன்றும் வீடியோவில், மீன் உண்ணும் காட்சியை பதிவு செய்து பொதுவெளியில் பரப்பியதற்காக, பாஜக தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை தேஜஸ்வி யாதவ் பெற்று வருகிறார்.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

தனக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்ததுமே, அது குறித்து கிண்டலாகவும், பாஜகவை தாக்கும் வகையிலும் தேஜஸ்வி பதில் அளித்திருந்தார். “உண்மையில் அந்த வீடியோ சற்றுப் பழையது. அறிவில்லாத மற்றும் உண்மை இல்லாத பேச்சுக்களைத் தொடரும் பாஜக தலைவர்களின் ஐக்யூவை பரிசோதிக்கும் நோக்கில் வேண்டுமென்றே அந்த வீடியோவை தாமதமாக பதிவிட்டோம்” என்று பதிலடி தந்திருக்கிறார். ஆனபோதும் அவரை பாஜக தலைவர்கள் விடுவதாக இல்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in