‘கண்ணிமைக்கும் நொடியில் ஒரு மாற்றம் இருக்கு’ - ரஜினியை மீண்டும் அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்!

‘கண்ணிமைக்கும் நொடியில் ஒரு மாற்றம் இருக்கு’ - ரஜினியை மீண்டும் அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்!

ரஜினியை மீண்டும் அரசியலுக்கு அழைக்கும் வகையில் அவருக்குக் கோரிக்கை விடுத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து பொது மேடைகளில் அடிக்கடி கருத்துகளைத் தெரிவிப்பது வழக்கம். மேலும் தன்னுடைய திரைப்படங்களிலும் தான் அரசியலுக்கு வருவது குறித்து சூசகமாகத் தெரிவிக்கும் வசனங்களைக் கொண்ட காட்சிகளாக வைத்து இருப்பார். இதனால் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தனர். இந்த நிலையில் ரஜினி தனது ரசிகர் மன்றத்தை மக்கள்  ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் மாற்றி, தான் தீவிர அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார். மாவட்டம் தோறும் ரசிகர்களை வரவழைத்து கருத்துக் கேட்டார். 30 வருடங்களாகக் காத்திருந்த ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகக் களத்தில் இறங்கி சொந்தச் செலவில் கட்சி வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார்கள்.

இந்நிலையில் தன்னுடைய உடல் நலத்தைக் காரணம் காட்டி ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு அரசியலுக்கு முழுக்கு போடுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதனால் அவரின் ரசிகர்கள் இலவு காத்த கிளியாக ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் ஆளுநரைச் சந்திப்பது, அரசியல் குறித்த கருத்துகளைத் தெரிவிப்பது என அடிக்கடி அரசியல் பற்றி ஏதாவதுப் பேசி பரபரப்பைக் கிளப்புவார்.

இந்நிலையில் ரஜினியை மீண்டும் அரசியலுக்கு அழைக்கும் விதமாகத் திண்டுக்கல் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.  ரஜினியின் பிறந்தநாள் டிசம்பர் 12ம் தேதி வருகிறது. இதை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அவரின் ரசிகர்கள்  ‘கண்ணிமைக்கும் நொடியில் மாற்றம் இருக்கு… தமிழகம் இன்னும் காத்திருக்கு தலைவா’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை திண்டுக்கல் நகரம் முழுவதும் ஒட்டியிருக்கிறார்கள். ரஜினியே விட்டுவிட்டாலும், இவர்கள் விடமாட்டார்கள் போல.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in