முன்பு ரஜினிகாந்த்.. இன்று இளையராஜா! : பின்னணியை விளக்கும் ஜோதிமணி

முன்பு ரஜினிகாந்த்.. இன்று இளையராஜா! : பின்னணியை விளக்கும் ஜோதிமணி

சமீபத்தில் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா ஒரு நூலுக்கு அணிந்துரை எழுதியதாக சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாக இளையராஜாவை பல்வேறு தரப்பினர் விமரசனம் செய்து வருகின்றனர். ஆனால், பாஜகவினரோ இளையராஜாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். அத்துடன் அவருக்கு பாரத ரத்னா வழங்க வே்டும் என்றும் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இளையராஜாவின் இசை, தமிழ் மண்ணின் ஆத்மார்த்தமான அடையாளங்களில் ஒன்று. அதற்காக அவரை நாம் என்றென்றும் நேசிப்போம். ஆனால், அம்பேத்கருக்கு இணையாக மோடியை உயர்த்தி அவர் பேசுவதை வெறும் அரசியல் புரிதலற்ற நிலைப்பாடு என்று கடந்து போய்விட முடியாது. ஆர்எஸ்எஸ் – பாஜக பாசிச, பிரிவினைவாத, வன்முறை சித்தாந்தம் ஊடுருவும் பல வழிகளில் இதுவும் ஒன்று" என்று கூறியுள்ளார்.

ஜோதிமணி எம்.பி
ஜோதிமணி எம்.பி

மேலும், " சமூகத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களைத் தனக்கு ஆதரவாகப் பேசவைப்பது. அதற்கென்று ஒரு விலையையும் அது வைத்திருக்கும். முன்பு ரஜினிகாந்த், இன்று இளையராஜா.

ஆனால், தமிழ் மண் எச்சரிக்கையும், விழிப்புணர்வும் மிகுந்தது. அன்பை, அமைதியை, ஒற்றுமையை, வளர்ச்சியை விரும்புவது. இதற்கு எதிரான ஆர்எஸ்எஸ் -பாஜக பாசிச சித்தாந்தை யார் கையில் எடுத்தாலும் அவர்களை, இரக்கமற்று தோலுரித்து தொங்கவிடும் வழக்கமுடையது. இளையராஜாவுக்கும் அதுதான் நேர்ந்துள்ளது. ஒரு கருத்தைக் கூறுவது ஒருவரின் உரிமை. அந்தக் கருத்து சமூகத்திற்கு எதிராக இருக்குமென்றால் அதற்கான கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். கருத்துரிமையும், விமர்சிக்கும் உரிமையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்" என்று கூறியுள்ளார்.

"இன்று இளையராஜாவிற்காக கருத்துரிமைக் காவலர் வேடம் பூண்டுள்ள பாஜக, ஏன் மக்கள் விரோத மோடி அரசிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைப்பவர்களின் கருத்துரிமைக்கு எதிராக அடக்கு முறையை கட்டவிழ்த்து விடுகிறது” என்று அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.