ராஜபக்ச வயலன்ட் கில்லர்... ரணில் சைலன்ட் கில்லர்!

கொழும்பு தொகுதி எம்.பி. மனோ கணேசன் தாக்கு
மனோ கணேசன்
மனோ கணேசன்

இலங்கையின் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, ஆட்சிமொழி, சமூக மேம்பாடு, இந்து கலாச்சார முன்னாள் மத்திய அமைச்சரும், கொழும்பு தொகுதியின் தற்போதைய எம்பி-யுமான மனோ கணேசன், ராஜபக்ச சகோதர்களுக்கு எதிராக அங்கே காட்டமான கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருப்பவர். ரணிலையும் சகட்டுமேனிக்கு போட்டுக் தாக்கும் அவர் 'காமதேனு' மின்னிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து...

இலங்கையின் பிரதமரான மகிந்த ராஜபக்சவை அகற்றி பதவிக்கு வந்துள்ள ரணில் விக்ரமசிங்க என்ன செய்யப் போகிறார் ?

அரசியலில் மகிந்த ராஜபக்ச ஒரு வயலன்ட் கில்லர் என்றால் ரணில் விக்ரமசிங்கே ஒரு சைலன்ட் கில்லர். அதாவது மகிந்த நேரடி யுத்தத்துக்குப் போனார். அதில் புலிகள், அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால், ரணிலின் பாணியே வேறு. அவர் புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை செய்தார். போர் செய்த புலிகளை, நாட்டுக்குள் கொண்டு வந்து போர் இல்லாத வாழ்வுக்கு அவர்களைப் பழக்கப்படுத்தி பலவீனப்படுத்தினார். புலிகளின் கிழக்கு மாகாண பிரதான தளபதி கருணாவை, புலிகளிலிருந்து பிரித்து எடுத்தார். அதனால்தான் 2005-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்து, புலிகள் ரணிலைத் தோற்கடித்தார்கள்.

அதன்பின் மகிந்த போரில் புலிகளை வெல்ல கருணாவின் பிரிவு பிரதான காரணமாக அமைந்தது. போரில் வெற்றி பெற்று ராஜபக்ச சகோதரர்கள் சிங்கள மக்கள் மத்தியில் 'யாராலும் வெல்ல முடியாத புலிகளை வென்ற வீரர்களாக' புகழ் பெற்றனர்.

போரில் புலிகள் தோற்க பிரதான காரணம், புலிகளைப் பிரித்த ரணில் விக்கிரமசிங்கே தான். அதனால்தான் இலங்கை அரசியலில் ரணில் விக்கிரமசிங்கே நரி என்று அழைக்கப்படுகிறார். கடந்த தேர்தலில் படுதோல்வியடைந்த தன்னையும், அவரது ஐக்கிய தேசிய கட்சியையும் காப்பாற்ற வேண்டும். அவரது கட்சியை உடைத்து புதுக் கட்சி அமைத்து நாட்டின் அடுத்த தலைவராக வர வேண்டும் என்று செயல்படும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவை பலவீனப்படுத்த வேண்டும். இவைதான் ரணிலின் பிரதான அரசியல் நோக்கங்கள். அதற்காக அவர் இன்று எதையும் செய்வார்.

மகிந்த ராஜபக்ச என்ற பிரதமரை வெளியேற்றி விட்டு அந்த இடத்தை பிடித்து ரணில் உள்ளே வந்து விட்டார். இப்போது அமெரிக்க-இலங்கை இரட்டை பிரஜையான பசில் ராஜபக்சவை அகற்ற அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டு வர முயல்கிறார். அடுத்ததாக அதிபர் கோத்தபய ராஜபக்சவை அனுப்பிவிட்டு காலியாகும் இடத்தில் அதிபராக அமர ரணில் கனவு காண்கிறார்.

இலங்கை மீண்டெழுவதற்கான திட்டங்கள் ஏதும் ரணிலிடம் இருக்கிறதா?

அதை ரணிலிடம் தான் கேட்க வேண்டும். உலக வங்கி நாட்டில் ஸ்திரமான ஆட்சியும், நிரந்தர பொருளாதார மீளெழுச்சி திட்டமும் இருந்தால் மாத்திரமே உதவ முடியும் என கூறிவிட்டது. அதையே சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவையும் கூறி வருகின்றன. அவ்வப்போது உணவு, மருந்து என உலகம் சிறு சிறு அளவில் உதவுகின்றதே தவிர, பெரும் உதவிகள் கிடைக்க உடனடி வாய்ப்பு இல்லை.

எக்கச்சக்க கடனை வாங்கிய ராஜபக்ச சகோதர்கள், அவற்றை வருமானம் வராத அரசியல் நோக்கம் கொண்ட துறைகளில் போட்டு விட்டார்கள். அதற்குள் மிகப்பெரும் ஊழல், மோசமான வீண்விரயம், பிழையான பொருளாதார நிர்வாக கொள்கை என மூன்று காரியங்கள் நிகழ்ந்துவிட்டன.

இலங்கையின் வீழ்ச்சிக்கு ராஜபக்ச சகோதரர்கள்தான் முழு காரணம் என்கிறீர்களா?

இல்லை. நான் அப்படிச் சொல்லவில்லை. 1948-ம் ஆண்டில் பிரிட்டீஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற போது, எமது நாட்டின் அந்நிய செலாவாணி கையிருப்பு, பிரித்தானிய பவுண்ட் நாணயத்தில் ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்து இருந்தது. அப்போது நாம் ஒருமுறை இரண்டாம் உலக யுத்தத்தில் தோய்ந்து போயிருந்த ஜெர்மனிக்கு கைமாற்று கடன்கூடக் கொடுத்துள்ளோம்.

1823-ம் ஆண்டிலிருந்து பிரிட்டீஷார் இலங்கையில் தேயிலை. ரப்பர், காபி என்ற பெருந்தோட்டங்களை உருவாக்கி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, ஒரு பிரம்மாண்டமான ஏற்றுமதி பொருளாதார கட்டமைப்பை இலங்கையில் உருவாக்கினார்கள். இந்த பெருந்தோட்டங்களை உயிரை கொடுத்து ரத்தம் வியர்வை சிந்தி உருவாக்கிய உழைப்பாளிகள், இன்று இலங்கையில் வாழும் 15 லட்சம் தமிழக வம்சாவளி மலையக தமிழர்களின் முன்னோர்தான்.

நமது தமிழ் மக்களின் உழைப்பினால்தான் இந்த எக்கச்சக்க பிரித்தானிய பவுண்ட் அந்நிய செலாவணி கையிருப்பு ஏற்பட்டது. நல்லெண்ணம் கொண்ட பிரிட்டீஷார் போகும் போது கணிசமான தொகையை சுதந்திர இலங்கைக்கு பரிசாக கொடுத்துவிட்டுப் போனார்கள். ஆனால், சிங்கள இனவாதிகள் நன்றிக்கெட்டதனமாக மலையக தமிழர்களில் சரிபாதிக்கு மேற்பட்டோரை இந்தியாவுக்கு ஆடு, மாடுகளைப் போல நாடு கடத்தினர். இதற்கு இந்திய நடுவண் அரசும் உடன்பட்டு துரோகம் செய்துவிட்டது.


இந்த சிங்கள-பெளத்தவாதம்தான், அதன் பின் சிங்கள மட்டுமே ஆட்சி மொழி என்று சொல்லி மலையக தமிழரில் ஆரம்பித்து, ஈழத்தமிழரையும் ஒடுக்கி இனவாத ஸ்ரீலங்காவை உருவாக்கியது. அதன் விளைவாக ஆயுதப் போர் நடந்து லட்சக்கணக்கில் தமிழரைக் கொன்று யுத்தத்துக்கு என்று நிதியை விரயம் செய்தது. கடைசியில் யுத்த வெற்றியை ஒரே காரணமாக கொண்டு வரலாற்றில் ஒருபோதும் இல்லாத சிங்கள வாக்குகளுடன் ஒரு தகைமையும் இல்லாத ராஜபக்ச சகோதரர்களிடம் நாட்டை தந்து அவர்கள் கொள்ளையடித்து இன்று இங்கே வந்து நிற்கிறது.

கோத்தபயவும் பதவி விலக வேண்டும் என்று சொல்லித்தான் இரண்டு மாதங்களாக போராட்டம் நடந்தது. ஆனால், மகிந்த மட்டுமே பதவி விலகினார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதுதானே ஆரம்பம். இது முடிவல்ல. தமிழ் மக்களைவிட சிங்கள மக்கள் தற்போது ராஜபக்ச சகோதரர்கள் மீது வெறுப்பின் உச்சத்தில் நிற்கிறார்கள். 2005-ம் ஆண்டு ராஜபக்ச முதலில் ஆட்சிபீடம் ஏறியபோது, வடக்கில் இறுதி யுத்தம் நிகழ்ந்தது. அப்போது இன்றைய அதிபர் கோத்தபய ராஜபக்சதான் பாதுகாப்புச் செயலாளர். அவருக்கு எதிராக கொழும்பு எம்பி-யான நான், யாழ்ப்பாண எம்பி-யான ரவிராஜ் உட்பட ஒருசில தமிழ், சிங்கள மனித உரிமை போராட்டக் குழுவினர் கொழும்பில் அன்று ஆரம்பித்த கோத்தபய எதிர்ப்புப் போராட்டம், இன்று, 'கோதா-கோ-ஹோம்' என்று சிங்கள பெருந்திரள் மக்களே கூவிக் கூவிப் போராடும் அளவுக்கு உருமாறி வளர்ந்து இருக்கிறது. இதனால் என்னை பலமுறை கொலை செய்ய முயன்றார்கள்; முடியவில்லை. என் நண்பன் ரவிராஜை 2007-ம் ஆண்டு கொன்றுவிட்டார்கள். இதற்கெல்லாம் காரணமான கோத்தபயவை பதவியில் இருந்து விரட்டும் வரை ஓயமாட்டோம். என் நண்பன் ரவிராஜின் ஆன்மா அப்போதுதான் சாந்தியடையும்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பணம், ஏற்றுமதி வருமானம் நாட்டுக்குள் வர வேண்டும். எமது நாட்டின் மொத்த கடனான 52 பில்லியன் (Billion) அமெரிக்க டாலர் தொகையை மீள செலுத்த வேண்டி, கடனைத் திருப்பி செலுத்துவதை மீள் அட்டவணைப்படுத்த வேண்டும். இப்போது இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத மஞ்சள் நோட்டீஸ் விடுத்துவிட்ட நாடாகி விட்டது. இவை பற்றி எந்த திட்டமும் இல்லாமல், எதுவும் செய்யாமல் இந்த அதிபரும் அவரது கும்பலும் கழுத்துக்கு கத்தி வரும்வரை சும்மாவே இருந்துவிட்டார்கள்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜி-7 நாடுகளின் உதவி உள்ளிட்ட உதவிகள் இலங்கைக்கு வராமல் தயங்கி நிற்கின்றன. இவை அனைத்துக்கும் காரணம். இலங்கையின் இன்றைய அரசு தலைவரின் மீது இலங்கையருக்கும், வெளிநாட்டவருக்கும் நம்பிக்கை இல்லை. எனவே பொருளாதார மீட்டெடுப்புக்கு முதல் நிபந்தனை 'கோதா-கோ-ஹோம்' தான்.

இலங்கைக்கு இந்திய அரசும் தமிழக அரசும் செய்து வரும் உதவிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஏறக்குறைய 4 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியில் கடன்வழி கடனாக சமீப காலத்தில் மட்டும் இந்தியா கொடுத்து உதவி இருக்கிறது. இன்று இலங்கையில் குறைந்தபட்ச அளவிலாவது கிடைக்கும் உணவுப் பொருட்கள், மருந்துவகைகள் முக்கியமாக பெட்ரோல் ஆகியவை கணிசமாக இந்திய ஒன்றிய அரசின் கடன் உதவிகள்தான்.

இதற்காக இலங்கையனாக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அத்துடன் தேசிய இனப்பிரச்சினை, மலையகத் தமிழர், ஈழத்தமிழர் தொடர்பான இலங்கை அரசின் பிழையான இனவாத கொள்கைகள் ஆகியவை மாற்றப்பட வேண்டிய நெருக்குதல்களை தர வேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. இலங்கை நெருக்கடியில் விழுந்திருக்கும் இவ்வேளைதான் இதற்கு பொருத்தமானது.

அடுத்தது, நம் தமிழக மக்களின் உணர்வுபூர்வமான உதவிகள் இப்போது வரத்தொடங்கி இருக்கின்றன. இந்த உதவி திட்டத்துக்கு தலைமை வழங்கி வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஒட்டுமொத்த இலங்கை மக்கள் சார்பாக நன்றிகள். இலங்கையில் வாழும் மலையக, ஈழத் தமிழர்களுக்கு உதவிடுகிறோம் என சுயமாக முன்வந்தார் தமிழக முதல்வர். தமிழ் முற்போக்கு கூட்டணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும், 'எமக்கு மட்டுமல்ல, சிங்கள மக்கள் உட்பட ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கும் உதவிடுங்கள்' என்று விடுத்த கோரிக்கையின் பின்னுள்ள செய்தியை காத்திரமாக அவர் புரிந்து கொண்டார். இதை 'பகைவருக்கும் அருள்வாய் நன்நெஞ்சே...' என்ற பாரதி பாடலுடன் குறிப்பிட்டு, அவர் ஆற்றிய உணர்வுபூர்வமான உரை இலங்கை முழுக்க ஒலித்தது. அதை சிங்களத்திலும் மொழிபெயர்த்துப் பரப்பினோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in