
அதிமுகவைப் பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டைப் போன்றவர் என எடப்பாடி அணியைச் சேர்ந்த ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஈபிஎஸ் ஆதரவாளருமான ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், “ அதிமுகவைப் பொறுத்தவரை கட்சியிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டுவிட்டால், அவருடன் தொண்டர்களோ, கழக நிர்வாகிகளோ யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அதுபோல் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நபரை மீண்டும் கட்சிக்குள் இணைப்பது சாத்தியம் இல்லை.
அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு என்பது இல்லவே இல்லை. எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் பலமான ஒரு நபராக திகழ்கிறார். அதிமுகவைப் பொறுத்த வரைக்கும் ஓ.பன்னீர் செல்வத்தைச் செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டாகத்தான் கருதுகிறோம். அவருடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை. பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிச்சாமி சந்தித்ததில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. கூட்டணிக் கட்சி என்பதால் மரியாதை நிமித்தமாகவே மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்” என்று கூறினர்.