ராஜ கண்ணப்பன் பேசியது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி குற்றமில்லையா?

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கேள்வி
மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் பேசிய கே.பாலகிருஷ்ணன்
மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் பேசிய கே.பாலகிருஷ்ணன்

“அரசு ஊழியரை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சாதி ரீதியாக பேசியது வன்கொடுமைத் தடுப்புச்சட்டப்படி குற்றமில்லையா?” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாட்டையொட்டி மதுரையில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

“ஹிஜாப் பிரச்சினையால் கர்நாடகாவில் 21 ஆயிரம் முஸ்லிம் மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. எவ்வளவு பெரிய வன்மம் இது? இவர்கள் என்ன தேசவிரோதிகளா? ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை என்று சொன்ன காரணத்தால் அவர்களின் வாழ்வு பறிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கொடுமையை இன்னமும் எத்தனை நாட்களுக்கு அனுமதிக்கப் போகிறோம்?

தமிழ்நாட்டில் உள்ள தர்ஹாக்களுக்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள் போகிறார்கள். இந்துக்கள் கோயிலுக்கு முஸ்லிம் வருகிறார்கள். இந்த உயர்ந்த பண்பாடு தமிழகத்தில் உள்ளது. எனவே, தமிழகத்தில் மதவெறியைக் கிளப்பும் காரியத்தை அனுமதிக்கமாட்டோம்.

இதன் காரணமாகத்தான் கோயில் கமிட்டிகளில் இடம் பெறுவதோடு, அது தொடர்பான நிகழ்ச்சிகளில் மதச்சார்பின்மையை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகிற பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்ய முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் சேர்ந்து தான் திமுக தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பல நல்ல விஷயங்கள் செய்வதைப் பாராட்டுகிறோம். அதே போல, விமர்சனங்கள் வரும் போது சுட்டிக்காட்டித் திருத்துங்கள் என்கிறோம். இந்தியாவில் பாஜகவை வீழ்த்துகிற மகத்தான போராட்டத்தில் திமுகவோடு இடதுசாரிகள் இணைந்து பணியாற்றுவார்கள் என்ற லட்சிய நோக்கத்தோடு அதைச் செய்து கொண்டிருக்கிறோம்.

ஆனால், தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பன், அரசு ஊழியரை சாதியைச் சொல்லி அவமானப்படுத்தியுள்ளார். இதனால் உடனடியாக ராஜ கண்ணப்பனின் துறையை மாற்றிய முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கையை வரவேற்கிறோம். ஆனால், துறையை மாற்றுவது மட்டும் தான் இதில் பிரச்சினையா? அமைச்சர் பேசியது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி குற்றமில்லையா”

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான பாலகிருஷ்ணன் பொதுவெளியில் இப்படி பேசி இருப்பது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in