மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து மேலும் ஒருவர் பலி: சசிகலா கண்டனம்

சசிகலா
சசிகலா

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவத்துக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் விழுந்து லட்சுமிபதி என்ற தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது

திமுக தலைமையிலான அரசு ஒவ்வொரு நாளும் இவ்வாறு உயிர்களை பலிகொடுத்து வேடிக்கை பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? இந்த ஆட்சியாளர்கள் தங்களது அலட்சியப் போக்கை உடனே கைவிட்டு, அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாவதை தடுத்து நிறுத்திட வேண்டும்.

தமிழகத்தில் மழைநீர் வடிகால் பணிகள், சாலை விரிவாக்க பணிகள் போன்ற அத்தியாவசிய பணிகள் நடைபெறும் பகுதிகளில் எல்லாம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்

சென்னையை அடுத்த மாங்காடு நகராட்சியில் வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்றபோது, மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கால் தவறி விழுந்த லட்சுமிபதி (42) என்பவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் இதேபோல் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in