ரயில்வே காலிப் பணியிடங்களை நிரப்பாதது ஏன்?

மதுரையில் தட்சிண ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம்
ரயில்வேயில் காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
ரயில்வேயில் காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை கோட்ட ரயில்வே அலுவலக மேற்கு நுழைவு வாயில் முன்பு, தட்சிண ரயில்வே தொழிலாளர் அமைப்பு (டி.ஆர்.இ.யூ.) மற்றும் சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் ஆன்ட்ரன் தலைமை தாங்கினார். பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், நீண்ட காலமாக காலியாக இருக்கும் ரயில்வே காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ரயில் நிலையங்கள், ரயில்வே பணிமனைகளை தனியாருக்குத் தாரைவார்க்கக்கூடாது, சங்க அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், கரோனாவால் பாதிக்கப்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு எஸ்சிஎல் வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மா.கணேசன், சிஐடியூ மாவட்டச் செயலாளர் தெய்வராஜ், தட்சிண ரயில்வே தொழிலாளர் அமைப்பின் உதவி பொதுச்செயலாளர் திருமலை அய்யப்பன், கோட்ட இணைச்செயலாளர் சங்கரநாராயணன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்குப் போதிய நிதி ஒதுக்காததை கண்டித்த தொழிலாளர்கள், ரயில்வே மருத்துவமனைக்கும், தமிழக ரயில்வே திட்டங்களுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும், மதுரை & ராமேஸ்வரம், மதுரை-கோவை வழித்தடங்களில் அதிக அளவில் ரயில்களை இயக்கவேண்டும், கிளஸ்டர் ரெயில்கள், கன்னியாகுமரி & எர்ணாகுளம், தாம்பரத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு இயக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். டிஆர்இயூ உதவி கோட்டத் தலைவர் வினோத்பாபு நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in