முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு: கட்டு கட்டாக சிக்கிய 10.90 கோடி ரூபாய்

முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு: கட்டு கட்டாக சிக்கிய 10.90 கோடி ரூபாய்

மேற்கு வங்க முன்னாள் அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜாகீர் ஹுசைனிடமிருந்து 10.90 கோடி ரூபாய் ரொக்கத்தை வருமானவரித்துறை கைப்பற்றியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ஜாகீர் ஹுசைன். தற்போது ஜாங்கிபூரின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஜாகீர் ஹுசைனுக்குச் சொந்தமான 28 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இதில் முன்னாள் அமைச்சர் ஜாகீர் ஹுசைனின் வீடு, அரிசி ஆலை, எண்ணெய் ஆலை, முர்ஷிதாபாத்தில் உள்ள ரகுநாத்கஞ்ச், சுடி மற்றும் சம்சர்கஞ்ச் ஆகிய பகுதிகளில் உள்ள பீடி தொழிற்சாலைகளில் இந்த சோதனை நடைபெற்றது. மேலும் கொல்கத்தா மற்றும் புதுடெல்லியிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் 10.90 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரெய்டு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில்," ஜாகீர் ஹுசைன் ஒரு தொழிலதிபர். அவர் கட்சியில் சேர்வதற்கு முன்பு மிகப்பெரிய அளவில் பீடி வியாபாரம் செய்தவர். இதுபோன்ற தொழில்களுக்கு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க கையில் பணம் தேவைப்படுகிறது. ஆனால், விசாரணை முடிவதற்குள் அவரது பணம் சட்டவிரோதமானது என்று சொல்வது தவறு " என்று கூறினார். மேற்கு வங்கத்தில் முன்னாள் அமைச்சருக்குச் சொந்த இடங்களில் 10.90 கோடி ரூபாய் பிடிபட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in