ராகுல் காந்தியின் பாதயாத்திரை முடிவடைந்தாலும், அவரது டி--ஷர்ட் மீதான சர்ச்சைகள் விடாது போல. வட இந்தியாவின் கொல்லும் குளிர் மத்தியில், ராகுலின் டி-ஷர்ட் மையப்படுத்தி அரசியலில் அனல் பறக்கிறது.
பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கியதுமே ராகுல் டி-ஷர்ட் அனைவரின் கண்களையும் உறுத்தத் தொடங்கியது. அதன் விலை பல லட்சம் பெறும் என்பதில் தொடங்கி பல்வேறு வதந்திகள் கிளம்பின. அந்த கேள்விகளே பூமராங் ஆனதில், மோடியின் உடுப்புகள் முதல் அண்ணாமலையின் வாட்ச் வரை விலைகளை விசாரித்தன. இடையில் ஒருவாறாக அடங்கியிருந்த டி-ஷர்ட் சர்ச்சை, ராகுலின் பாதயாத்திரை டெல்லியில் நுழைந்ததில் மீண்டும் பற்றிக்கொண்டது.
வட இந்தியாவில் ஒற்றை இலக்கத்துக்கு இறங்கியிருக்கும் சீதோஷ்ணம் காரணமாக, குளிர்தடுப்புக்கான ஜாக்கெட் அணிந்தே வெளியில் உலவ இயலும். ஆனால் ராகுல் வழக்கம்போல ஒற்றை டி-ஷர்ட் உடனாக டெல்லியிலும் உலவ ஆரம்பித்தார். குறிப்பாக அப்படி அவர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்ததும் பாஜகவினரை உசுப்பேற்றியது.
மேலும் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ராகுலை ஸ்ரீராமராக உருவகப்படுத்தியதும், ராகுல் மேற்கொள்ளும் ’தபஸ்’ அவரை குளிரிலிருந்து காப்பாற்றுவதாக சொன்னதும் பாஜகவினரை பதற வைத்தது. ஸ்ரீராமர் மற்றும் இந்து மத அடையாளங்கள் பலவற்றிலும் ஒட்டுமொத்த உரிமை கோரும் பாஜக ஆதரவாளர்களால், அதில் ராகுல் பங்குபோடுவதை ரசிக்க முடியவில்லை. எனவே தாக்குதல்களில் வேகம் கூட்டினார்கள்.
குளிர் தாக்காதிருக்க ராகுல் ஏதோ ’பிரசாதம்’ சாப்பிடுகிறார் என்றெல்லாம் தூற்றினார்கள். அதுவரை அமைதிகாத்த ராகுல் தன் பாணியில் திருப்பியடிக்க ஆரம்பித்தார். ’குளிர் குறித்து என்றாவது ஏழை விவசாயிகள், தொழிலாளிகளிடம் கேட்டிருக்கிறீர்கள். சதா எனது ஆடை குறித்தே அலசுவோர், அந்த ஆடைகூட இல்லாதவர்களைப் பற்றி யோசித்தது உண்டா?’ என்றெல்லாம் எதிர் தரப்பினரை வாயடைத்தார்.
ஆனாலும் ராகுல் டி-ஷர்ட் குறித்த ஆராய்ச்சிகள் அடங்கியபாடில்லை. இன்று வெளியாகி உள்ள புலனாய்வு விவரங்கள் சில, ’ராகுலின் டி-ஷர்ட் உள்ளாக குளிரிலிருந்து தற்காக்கும் தெர்மல் தகடுகள் இருப்பதாக’ கண்டுபிடித்துள்ளன. அந்த உண்மையை பொதுவெளியில் அம்பலப்படுத்தி உள்ளனர். 3 ஆயிரம் கிமீ நடந்து ராகுல் இன்னும் இளைக்காது காட்சியளிப்பதன் ரகசியம், அவரது டி-ஷர்ட்டுக்குள் பல்லடுக்கு தகடுகளாக ஒளிந்திருக்கிறது என்றெல்லாம் புலனாய்வு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதன் மூலம் ’ராகுல் ஒரு பொய்யர்’ என்ற பிரச்சாரத்தையும் தொடர்ந்து வருகின்றனர்.
இதையொட்டியே சமூக வலைதளங்களில் விவாதங்களும் சூடுபிடித்துள்ளன. பாஜகவினருக்கு பதிலடி தரும் ராகுல் ஆதரவாளர்களில் சிலர் ராகுல் டி-ஷர்டுக்குள் ஏதும் உடுத்தவில்லை என்பதை நிரூபிக்க முயல, பெரும்பாலானோர் பாஜகவினரை மேலும் வெறுப்பேற்றி நகைச்சுவையாக கடந்து செல்கின்றனர்.