நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கும், தாக்கரே பேரனுக்கும் என்ன தொடர்பு?

ரியாவுக்கு ஆதித்யாவின் 44 அழைப்புகள்
சுஷாந்த் - ரியா
சுஷாந்த் - ரியா

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை நிகழ்ந்து இரண்டரை வருடங்களாகிறது. காவல்துறை மட்டுமன்றி சிபிஐ, என்சிபி என பல்வேறு விசாரணை அமைப்புகள் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி குறித்து துழாவி வருகின்றன. இதற்கிடையே சுஷாந்த் சிங் மரணத்தில், சிவசேனா கட்சியை தோற்றுவித்த பால் தாக்கரே பேரன் ஆதித்ய தாக்கரேக்கு என்ன தொடர்பு என்ற கேள்வி மக்களவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

பீகாரை பூர்விகமாக கொண்டவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பாலிவுட்டில் வாரிசுகள் ஆதிக்கம் காரணமாக வளரும் நடிகரான சுஷாந்த் சிங்கின் வாய்ப்புகள் பறிபோனதாக குற்றச்சாட்டு நிலவியது. இதன் மத்தியில் 2020, ஜூன் 14 அன்று தனது மும்பை அபார்மென்டில் மர்ம முறையில் இறந்து கிடந்தார். காவல்துறை விசாரணையில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்தது.

தொடர்ந்து சுஷாந்துக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விநியோகித்ததாக அவருக்கு நெருக்கமான தோழி ரியா சக்கரவர்த்தி சிக்கினார். சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக பாலிவுட் பிரபலங்கள் சிலர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை சிபிஐ அமைப்பும், போதை விவகாரத்தை மத்திய அரசின் போதைப்பொருள் தடுப்பு பிரிவான என்சிபி-யும் விசாரித்தன. மும்பை போலீஸாருக்கு அப்பால் பீகார் காவல்துறையும் தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.

இதற்கிடையே மக்களவையில் பேசிய, சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவின் எம்பியான ராகுல் ஷெவாலே என்பவர், ’சுஷாந்த் சிங் மரணத்துக்கும் ஆதித்ய தாக்கரேக்கும் என்ன தொடர்பு? இது தொடர்பாக சிபிஐ விசாரணை என்ன சொல்கிறது?’ என்பது போன்ற கேள்விகளை எழுப்பினார்.

ரியா - ஆதித்யா
ரியா - ஆதித்யா

சிவசேனா கட்சி தலைவராகவும், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராகவும் இருந்த உத்தவ் தாக்கரேயின் மகன், இந்த ஆதித்ய தாக்கரே. உத்தவ் தாக்கரேயின் வலது கரமாக சிவசேனா கட்சியில் செல்வாக்காக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா கட்சியை உடைத்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தற்போது மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறார்கள். ஷிண்டே தலைமையிலான அதிருப்தியாளர்கள் சிவசேனா கட்சியில் உருவாக, உத்தவ் மகன் ஆதித்ய தாக்கரேயின் அரசியல் தலையீடும் ஒரு காரணம்.

இந்த ஆதித்ய தாக்கரே, 2020-ல் ஷாந்த் சிங் பிரியத்துக்குரிய தோழி ரியா சக்கரவர்த்திக்கு 44 அழைப்புகள் மேற்கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. ’ஏ.யு’ என்ற ஆங்கில எழுத்துக்கள் பெயரிலான நபருக்கும், ரியா சக்கரவர்த்திக்கும் உரையாடல்கள் நடந்திருப்பதை பீகார் போலீஸார் உறுதி செய்தனர். இந்த ’ஆதித்ய உத்தவ்’ என்பதன் சுக்கமே ’ஏ.யு’! இதைத்தான் எம்பி ஷெவாலே, தற்போது மக்களவையில் கிளப்பியிருக்கிறார். சுஷாந்த் சிங், ரியா சக்கரவர்த்தி, ஆதித்ய தாக்கரே என முக்கோணத்தின் புள்ளிகளை இணைத்து அவர் புதிய கேள்வியை எழுப்பியிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை என்ன சொல்கிறது என்றும் கேட்டிருக்கிறார்.

ஆனால், எம்பி ஷெவாலே கேள்விகளை ஆதித்ய தாக்கரே சுலபமாக எதிர்கொண்டிருக்கிறார். ‘கட்சிக்கும், அதன் கொள்கைகளுக்கும் விசுவாசமற்றவர்வகள் இம்மாதிரி அடிப்படையற்ற கேள்விகளை எழுப்பத்தான் செய்வார்கள். மேலும் முதல்வராக இருக்கும் ஷிண்டேயின் நிலபேர ஊழல்கள் தொடர்பாக நாங்கள் எழுப்பும் கேள்விகளை திசை திருப்பவே இவ்வாறு முயல்கிறார்கள்’ என தாக்கரே பேரன் தனது விளக்கத்தை முடித்துக்கொண்டுள்ளார்.

இந்த புதிய சர்ச்சையால் சுஷாந்த் சிங் மரண வழக்கு குறித்த ரசிகர்களின் விவாதங்கள், பொதுவெளியில் மீண்டும் உயிர் பெற்றிருக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in