ராகுல் இல்லாவிட்டால் கெஜ்ரிவால்; எதிர்கட்சிகளை ஒருமுகப்படுத்தும் திமுகவின் செயல்திட்டம்!

ராகுலுடன் ஸ்டாலின்
ராகுலுடன் ஸ்டாலின்

மாநில அரசின் திட்டத்தைத் அந்த மாநில முதல்வர், மத்திய அமைச்சர்கள், பிரதமர், குடியரசு தலைவர் ஆகியோர் தொடங்கி வைப்பது தான் வழக்கம். ஆனால், தமிழகத்தில் புதுமைப்பெண் உள்ளிட்ட மாநில அரசின் திட்டங்களை துவக்கிவைக்க இன்னொரு மாநிலத்தின் முதல்வரை அழைத்து அரசியல் புதுமை செய்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

தேசிய கட்சியின் தலைவரான ராகுல் காந்தி தேசம் தழுவிய ஒற்றுமை யாத்திரை தொடங்கியிருக்கிறார். அதை ஒரு மாநிலக் கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வித்தியாசமான இந்த நிகழ்வுகளின் பின்னால் பலமான அரசியல் காரணங்களும் கணக்குகளும் இருக்கிறது.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக பிற கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகள் வேகமெடுத்திருக்கும் நிலையில் திமுக ஒரு புது ரூட்டைப் பிடித்து செல்ல ஆரம்பித்திருக்கிறது. பாஜகவை எதிர்ப்பது, தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளோடு இணைந்து செயல்படுவது, அத்தகைய கட்சிகளை ஒருங்கிணைப்பது ஆகியவை திமுகவின் செயல்திட்டமாக இருக்கலாம் என்கிறார்கள்.

ஒரு காலத்தில் தேசத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி தற்போது தேய்ந்து போய் வெறும் 44 எம்பி-க்களை மட்டுமே தனக்காக வைத்திருக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் இப்போது அந்த எல்லையை இரண்டு, மூன்று மாநிலங்களுக்குள் சுருக்கிவிட்டது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று சூளுரைத்து வரும் பாஜக, கிட்டத்தட்ட அந்த நிலையை நோக்கி காங்கிரஸை தள்ளிவருகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தி அடைந்து ஒவ்வொருவராக வெளியேறி வருவது அந்தக் கட்சியை இன்னும் பலவீனப்படுத்தி வருகிறது. இதனால், பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் மாநில கட்சிகள் பலவும் தங்களுக்கு தலைமை ஏற்கவும், பாஜகவை எதிர்க்கவும் சரியான மாற்றாக காங்கிரஸ் கட்சியை நம்பவும், ஏற்கவும் முடியாமல் தவித்து வருகின்றன.

ஸ்டாலினின் கரத்தை இறுகப் பிடித்திருக்கும் ராகுல்...
ஸ்டாலினின் கரத்தை இறுகப் பிடித்திருக்கும் ராகுல்...

இந்த நிலையில்தான் பாஜக கூட்டணியிலிருந்து பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் வெளியில் வந்தது தேசிய அரசியலில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இத்தனை நாளும் பாஜகவுடன் ஒட்டி உறவாடிய நிதிஷ்குமார், இப்போது மிகத்தீவிரமாக அக்கட்சியை எதிர்க்கிறார். தன்னைப் போல பாஜகவை எதிர்க்கும் மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையிலும் இறங்கியிருக்கிறார். ஏற்கெனவே அவரோடு ராஷ்ட்ரிய ஜனதாதளம் இணைந்திருக்கும் நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்துப் பேசி மூன்றாவது அணி விஷயத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் நிதிஷ்.

ஏற்கெனவே மம்தா பானர்ஜியும் பாஜகவுக்கு எதிரான அணியை கட்டமைக்கும் வேலையை செய்து வருகிறார். காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் முயற்சி. அதற்கான முன்னெடுப்புகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இந்தக் கட்சிகளின் கூட்டணிகளில் இடம்பெறாமல் இன்னொரு பக்கம் அர்விந்த் கெஜ்ரிவால் தனி மனிதனாக பாஜகவை மிகவும் வீரியத்தோடு எதிர்த்து வருகிறார். அவரின் வீரியத்தை வீழ்த்த பல்வேறு வகையிலும் முயன்று பார்க்கிறது பாஜக. அவருடைய அமைச்சரவை சகாவை சோதனைகளுக்கு உடுபடுத்தி எப்போது வேண்டுமாமாலும் கைதுசெய்யப்படலாம் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. தங்கள் கட்சி எம்எல்ஏ-க்களை வளைக்கவும் பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறது.

டெல்லி, பஞ்சாப் தவிர்த்து பாஜகவின் கோட்டையான குஜராத்திலும் கால்பதித்து அங்கும் மோடிக்கு எதிரான தனது ஆட்டத்தை துவக்கியிருக்கிறார் கெஜ்ரிவால். குஜராத் சட்டப் பேரவை தேர்தல் களத்தில் ஆம் ஆத்மியும் குதித்திருக்கிறது. செப்டம்பர் 2-ல் அம்மாநிலத்தில் நடைபெற்ற ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டது பாஜகவை இன்னும் சூடாக்கிவிட்டது.

சென்னை அரசு விழாவில் அர்விந்த் கெஜ்ரிவால்...
சென்னை அரசு விழாவில் அர்விந்த் கெஜ்ரிவால்...

ஆக, இன்றைய தேதியில் பாஜகவை மிகக்கடுமையாக எதிர்க்கும் ஒரு சில வலுவான கட்சிகளில் ஆம் ஆத்மியும் முக்கிய கட்சியாக திகழ்கிறது. அதுவே அந்தக் கட்சியை திமுகவை நெருங்கவும் வைத்திருக்கிறது. தன்னைப் போலவே பாஜகவை மிகக் கடுமையாக எதிர்க்கும் திமுகவோடு நட்பு பாராட்டுவது எல்லா வகையிலும் நலம் பயக்கும் என்று கருதுகிறார் அர்விந்த் கெஜ்ரிவால். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் இந்த நட்பு அமைந்திருக்கிறது. தாங்கள் இருவரும் ஒன்றாகக் கைகோப்பதன் மூலம் பாஜகவுக்கான எதிர்ப்பு இன்னும் பலப்படும் என்று இரு கட்சிகளும் ஒருமுகமாகக் கணிக்கின்றன. இதை பாஜகவுக்கு உணர்த்தவே தமிழக அரசின் திட்டத்தை துவக்கி வைக்க அர்விந்த் கெஜ்ரிவாலை அழைத்திருக்கிறார் ஸ்டாலின். ஒருவகையில் பார்த்தால் இதுவும் ஒருவிதமான ராஜதந்திரம் தான்.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே முதல் ஆளாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக பிரகடனம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின். ஆனால், அவரது அந்தப் பிரகடனத்தை வடக்கில் இருக்கும் பிராந்தியக் கட்சிகள் ஏற்காமல் போனதால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. ஆனாலும், தனது முந்தைய கோஷத்தை விட்டுவிட ஸ்டாலின் விரும்பவில்லை. கடந்த தேர்தலில் கைகூடாமல் போன விஷயத்தை, வரும் தேர்தலில் நிகழ்த்திக்காட்டிவிட அவர் துடிக்கிறார். அதற்காகவே இம்முறை காங்கிரஸ் அணியில் எப்படியேனும் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க நினைக்கிறார் ஸ்டாலின்.

ஆனால், பலவீனப்பட்டுக் கிடக்கும் காங்கிரஸ் கட்சியை பாஜகவுக்கு எதிராக நிறுத்துவது என்பது சரியான உத்தியாக இருக்காது; அது மக்களிடம் எடுபடவும் செய்யாது என மாநிலக் கட்சிகள் பலவும் நினைக்கின்றன. அதனால்தான் நிதிஷ்குமார், மம்தா, சந்திரசேகர்ராவ் என ஆளுக்கொரு ரூட்டில் தனித் தனியாக மூன்றாவது அணி முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேபோல் இப்போது திமுகவும் தனது ராஜதந்திர வேலைகளை துவக்கியிருப்பதாக சொல்கிறார்கள்.

தனித்தனியாக செயல்பட்டாலோ அல்லது காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைந்தாலோ பாஜகவை வெல்ல முடியாது என்பது திமுகவின் கூற்று. இது மூன்றாவது அணி முஸ்தீபில் இருக்கும் பிற கட்சிகளுக்கும் தெரியும். ஆனாலும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட அந்தக் கட்சிகளுக்கு விருப்பமில்லை. அதனால், காங்கிரசை ஏற்கமுடியாமல் நிற்கும் கட்சிகளை முதலில் ஒரு அணியாகவோ, அல்லது சில அணிகளாகவோ இணைத்துவிட்டால் தேர்தல் நெருங்கும்போது அவற்றை காங்கிரசுடன் நிபந்தனையுடன் இணைத்து பாஜகவை எதிர்க்கலாம் என்பது திமுகவின் மாஸ்டர் பிளான்.

அதற்காகத்தான் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை சென்னைக்கு அழைத்து முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் முதல்வர். காங்கிரசுடன் நேரடியாக ஆம் ஆத்மிக்கு மோதல்கள் இருக்கிறது. அதனால் காங்கிரஸ் கூட்டணியில் இணைவதில் அக்கட்சிக்கு சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் அதேசமயம், பாஜக எதிர்ப்பில் தீவிரம் காட்டிவரும் இன்னொரு மாநிலக் கட்சியான திமுகவுடன் இணைந்து செயல்படுவதில் ஆம் ஆத்மிக்கு எந்த சிக்கலும் இருக்கப்போவதில்லை. அதைப் புரிந்துகொண்டுதான் திமுக ஆம் ஆத்மியை நேசமாகப் பார்க்கிறது. இதே போல் இன்னும் சில மாநிலக் கட்சிகளோடும் திமுகவே பேச்சுநடத்தும்; அவற்றை அணியாக திரட்டும் வேலைகளை செய்யும் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

ஒருவேளை, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க மாநிலக் கட்சிகள் சம்மதிக்காத பட்சத்தில் அர்விந்த் கெஜ்ரிவாலை முன்னிறுத்தவும் திமுக திட்டமிடுகிறது. அவரை ஏற்பதில் எந்தக்கட்சிக்கும் சிக்கல் இருக்காது என்று திமுக கருதுகிறது. “ராகுலை பிரதமராக ஏற்றுக்கொள்ளுங்கள். அதில் சிக்கல் இருப்பதாக கருதினால் அர்விந்த் கெஜ்ரிவாலை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அனைவரும் இணைந்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும்” என்று திமுக வலியுறுத்தும். இதற்கு மாநிலக் கட்சிகள் உடன்படும்பட்சத்தில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான அணியைக் கட்டமைக்க முடியும்.

ஆக, ராகுல் இல்லாவிட்டால் கெஜ்ரிவால் என்ற மாற்றுத் திட்டத்துடன் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை திமுக முன்னெடுக்கிறது. உள்ளே புகுந்து பாஜக ஏதும் குதாம் வேலை செய்யாமல் இருந்தால் எதுவும் நடந்து போகும் என எதிர்பார்க்கலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in