‘இந்தியாவில் ஒரு புதிய ஆற்றல் உருவாகி வருகிறது’ - ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே பெருமிதம்

 ‘இந்தியாவில் ஒரு புதிய ஆற்றல் உருவாகி வருகிறது’ - ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே பெருமிதம்

வாக்காளர்கள் காங்கிரஸ் மீது அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதை ராகுல் காந்தி புரிந்துகொண்டு பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொள்ள முடிவு செய்தார் என்று காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை மூலம் லட்சக்கணக்கான மக்கள் காங்கிரசுடன் இணைக்கப்பட்டு வருவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய கார்கே, “காங்கிரஸ் கட்சி 137 ஆண்டுகளாக மக்களின் வாழ்வில் அங்கம் வகிக்கிறது. எங்களின் நல்ல பணி மற்றும் தலைவர்களின் தியாகங்கள் இருந்தபோதிலும், வாக்காளர்கள் எங்கள் மீது சற்றே அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டு, பாரத் ஜோடோ யாத்திரையில் மக்களைச் சந்தித்து, அவர்களுடன் நேரடியாகப் பழகி, அவர்களின் துயரங்களையும், வலிகளையும் கேட்டு, அவர்களைச் சந்திக்கும் ராகுல் காந்திக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடைபயணத்தின்போது அவர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் வழியில் அனைவரையும் சந்திக்கிறார். இது எங்கள் கட்சியின் பெரிய சாதனை, இது எங்களுக்கு குறிப்பாக எனக்கு ஒரு பெரிய பரிசு " என்று கூறினார்.

மேலும், "நாட்டில் ஒரு புதிய ஆற்றல் உருவாகி வருகிறது, இந்த ஆற்றலை வீணடிக்க விடமாட்டோம். காங்கிரஸ் தலைவராக உங்கள் உதவியை நாட வேண்டியது எனது கடமை. பொருளாதார சமத்துவம், அரசியல் சாசன விழுமியங்களைப் பாதுகாத்தல், மத நல்லிணக்கம், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் போன்ற பாரத் ஜோடோ யாத்ராவின் செய்தியை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல ஒன்றிணைய வேண்டும் என்று எனது காங்கிரஸ் குடும்பத்தினருக்கு இன்று நான் அழைப்பு விடுக்கிறேன்.

மல்லிகார்ஜூன் கார்கே
மல்லிகார்ஜூன் கார்கே

இந்திய மக்களின் போராட்டங்களிலும், லட்சியங்களிலும் காங்கிரஸ் அவர்களுடன் இருக்கிறது என்பதைச் சொல்வோம். அவர்களின் குரலாக நாம் இருக்கப் போகிறோம், அதற்காக தங்கள் இரத்தத்தையும் வியர்வையும் கொடுத்த முன்னோர்கள் நினைத்த இந்தியாவுக்காக பாடுபடுவோம் என்று சொல்லுங்கள்" என்று கூறினார்.

நாட்டில் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 3,570 கிமீ பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி வழிநடத்துகிறார். இந்த பயணத்தின்போது சமூகத்தில் வெறுப்பு மற்றும் வன்முறைச் சூழலை உருவாக்குவதாகக் குற்றம்சாட்டி பாஜகவைத் தாக்கி வருகிறார். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சனைகளையும் அவர் இந்த யாத்திரையின் போது எழுப்புகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in