நீலகிரி வழியாக வயநாடு செல்லும் ராகுல்காந்தி, அங்கு தோடர் பழங்குடியின மக்களை சந்தித்து பேசுகிறார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மீண்டும் எம்.பி,யாக பதவி ஏற்ற பின்னர், இன்று தனது தொகுதியான வயநாடுக்கு செல்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல், அங்கிருந்து கார் மூலம் ஊட்டி அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு செல்கிறார். அங்கு, முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து அவருடன் தேநீர் அருந்துகிறார். தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பு குறித்து கேட்டறிகிறார்.
பின்னர், மதிய உணவை முடித்து கொண்டு கூடலூர் செல்லும் வழியில் முத்தநாடு மந்து பகுதியில் உள்ள தோடர் பழங்குடியின கிராமத்திற்கு செல்கிறார். அங்கு பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களது கோயிலை பார்வையிடுகிறார். அதன்பின்னர், அங்கிருந்து கூடலூர், மசினகுடி, முதுமலை வழியாக கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு செல்வதாக கூறப்படுகிறது. ராகுலின் ஊட்டி வருகையையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.