31 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறை: தந்தையின் நினைவிடத்திற்குச் செல்கிறார் ராகுல் காந்தி

31 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறை: தந்தையின் நினைவிடத்திற்குச் செல்கிறார் ராகுல் காந்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு 31 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அவரது மகன் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்த இருக்கிறார்.

1991-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூர் வந்திருந்தார். அப்போது விடுதலைப் புலிகள் நடத்திய குண்டு வெடிப்பில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட இடத்தில் நாளை அவரது மகன் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்த உள்ளார். ராஜீவ் இறப்பிற்குப் பிறகு, அவரது நினைவிடத்திற்கு ராகுல் காந்தி வருவது இதுவே முதல் முறை.

ராஜீவ்காந்தி நினைவிடத்திற்குச் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தியிருந்தாலும், ராகுல் இதுவரை ஒரு முறை கூட அங்கு அஞ்சலி செலுத்தியதில்லை. ராகுல் காந்தி அரசியல் பிரவேசம் செய்யத் தொடங்கியது முதல் பொதுச் செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்த நிலையிலும் ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு வருவதைத் தொடர்ந்து தவிர்த்து வந்திருக்கிறார். 2009 தமிழக பயணத்தின் போது மூன்று நாட்கள் தமிழகத்தில் தங்கி 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது கூட அங்குச் செல்லவில்லை.

இந்நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரியிலிருந்து இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை நாளை தொடங்க இருக்கிறார் ராகுல்காந்தி. குமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொள்ளும் ராகுல், 3,750 கிலோ மீட்டர் தூரத்துக்கு 12 மாநிலங்களில் பயணிக்கத் திட்டமிட்டு, மொத்தம் 150 நாட்கள் பயணம் செய்கிறார். அதற்காக தமிழகம் வரும் ராகுல் காந்தியின் பயணத் திட்டத்தை அக்கட்சியின் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ளார். அதில், இன்று மாலை டெல்லியிலிருந்து புறப்படும் ராகுல் காந்தி, நாளை காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து திருவனந்தபுரம் வழியாகக் கன்னியாகுமரி செல்ல திட்டமிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in