‘உண்மையை உங்களால் சிறைப்பிடிக்கவே முடியாது மோடி ஜி!’ - ஜிக்னேஷ் கைதுக்கு ராகுல் கண்டனம்

‘உண்மையை உங்களால் சிறைப்பிடிக்கவே முடியாது மோடி ஜி!’ - ஜிக்னேஷ் கைதுக்கு ராகுல் கண்டனம்
ஜிக்னேஷ் மேவானி

குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி நேற்று இரவு கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் அரூப் குமார் தே அளித்த புகாரின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

வழக்கறிஞர், பத்திரிகையாளர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பல்வேறு தளங்களில் இயங்கிவருபவர் ஜிக்னேஷ் மேவானி. பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய இளம் தலைவரான அவர், உனாவில் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து போராடியவர். படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டுக்காகப் போராடிய ஹர்திக் படேலும், ஜிக்னேஷ் மேவானியும் பாஜகவுக்கு எதிரான இளம் தலைவர்களாக அறியப்படுகின்றனர். ஹர்திக் படேல் காங்கிரஸில் இணைந்துவிட்டார்.

2017 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வட்காம் தொகுதி சட்டப்பேரவையில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற ஜிக்னேஷ் மேவானி, அதன் பின்னர் காங்கிரஸில் இணைந்தார். இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

பின்னணி என்ன?

குற்றவியல் சதி, இரண்டு சமூகங்களுக்கு இடையே பகையை ஏற்படுத்துதல், அமைதியைக் குலைக்கும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல் போன்ற பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகளின் கீழும் அவர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்னர் நாதுராம் கோட்சே தொடர்பாக அவர் ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டுகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கிவிட்டது.

எனினும், பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் குஜராத்துக்கு வந்து அசாம் போலீஸார் அவரைக் கைதுசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாலன்பூரில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருந்த அவரை நேற்று இரவு 11.30 மணிக்கு அசாம் போலீஸார் கைதுசெய்தனர். அகமதாபாத் கொண்டுசெல்லப்பட்ட அவர், அங்கிருந்து விமானம் மூலம் அசாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

தகவல் அறிந்த குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜக்தீஷ் தோகார் உள்ளிட்ட காங்கிரஸார் அகமதாபாத் விமான நிலையத்துக்கு விரைந்தனர். விமான நிலையத்துக்குள் அசாம் போலீஸார் அவரை அழைத்துச் சென்றபோது அவரது ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும், ஜிக்னேஷ் மேவானியிடமும் போலீஸாரிடமும் பல கேள்விகளை எழுப்பினர். அப்போது, “பாஜக அரசை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களுக்கு இதுதான் நடக்கிறது. உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் போராடுவேன்” என்று ஜிக்னேஷ் மேவானி தெரிவித்தார்.

எஃப்.ஐ.ஆர் நகல் வழங்கப்படவில்லை

தனக்கு எஃப்.ஐ.ஆர் நகல் தரப்படவில்லை என்றும் குடும்பத்தினருடன் பேச அனுமதி அளிக்கவில்லை என்றும் ஜிக்னேஷ் மேவானி தெரிவித்திருக்கிறார். போலீஸார் அவருக்கு எஃப்ஐஆர் நகலை வழங்காதது ஏன் எனப் அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர். ‘அசாம் போலீஸ் ஒழிக!’ என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.

ராகுல் காந்தி கண்டனம்

இதற்கிடையே ஜிக்னேஷ் மேவானியின் கைது ஜனநாயக விரோதமானது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக ட்வீட் செய்திருக்கும் ராகுல் காந்தி, ‘மோடி ஜி! அரசு இயந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்து எதிர்க்குரல்களை முடக்க நீங்கள் முயற்சிக்கலாம். ஆனால், உண்மையை ஒருபோதும் உங்களால் சிறைப்பிடிக்க முடியாது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘சத்யமேவ ஜயதே’ என்றும், ‘டரோ மத்’ (பயப்படாதீர்கள்) என்றும் அந்த ட்வீட்டில் ஹேஷ்டேக் இட்டிருக்கிறார் ராகுல்!

Related Stories

No stories found.