‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்க மாட்டோம்’ - ராகுல் காந்தி உறுதி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அரசு சொத்துக்களை தனியார் மயமாக்குவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக, வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக கர்நாடகம் முழுவதிலும் இருந்து சுமார் 1,800 இளைஞர்களுடன் உரையாடிய அவர், நலிவடைந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடியது பொதுத்துறை பிரிவுகள்தான் என்றார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், " நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுவதற்கு சரியான இடமும் சரியான சூழலும் கொடுக்கப்பட்டு, ஒழுங்காக செயல்பட சுதந்திரம் கொடுக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்படும்.

தேசிய மற்றும் மாநில அளவில் மில்லியன் கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதை உறுதிசெய்யும் ஒரு உத்தியை நாங்கள் வகுக்கிறோம். அரசுத் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதன் மூலம் அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கு எங்கள் கட்சி முழுக்க முழுக்க உறுதிபூண்டுள்ளது. எனவே அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகள் வரக்கூடிய முதல் இடம் சுகாதாரம் மற்றும் கல்வித்துறைதான்” என தெரிவித்தார்

மேலும், “காங்கிரஸ் அரசு பொது சுகாதாரம் மற்றும் பொதுக் கல்விக்கு அதிக பணம் செலவழிக்கும், இவை அரசாங்க வேலைகளாக இருக்கும். மேலும், நாட்டில் அதிக எண்ணிக்கையிலான தனியார் துறை வேலைவாய்ப்புகள் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் சிறு வணிகர்களிடமிருந்து வருகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நிறுவனங்களுக்கு ஆதரவளிப்போம். அவர்களுக்கு வங்கிகளிடமிருந்து நிதியுதவி கிடைக்கும் வகையில் திட்டங்கள் தீட்டுவோம்.

இளம் தொழில் முனைவோர் தங்கள் சொந்தத் தொழில்களை உருவாக்க உதவுவதற்காக நாங்கள் சிறப்பு நிதியினை உருவாக்குவோம். நல்லிணக்கம் இல்லாத, அமைதி இல்லாத, வன்முறையில் ஈடுபடும் ஒரு சமூகத்தால் பொருளாதார ரீதியாக வளரவோ அல்லது இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவோ முடியாது”என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in