`ஆக்ஸிஜன் கிடைக்காததால் என் அப்பாவை இழந்தேன்'; கண்ணீர்விட்ட சிறுமி; கண்கலங்கிய ராகுல் காந்தி

`ஆக்ஸிஜன் கிடைக்காததால் என் அப்பாவை இழந்தேன்'; கண்ணீர்விட்ட சிறுமி; கண்கலங்கிய ராகுல் காந்தி

கரோனாவால் பாதிக்கப்பட்ட எனது அப்பாவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காததால் இறந்துவிட்டார் என்று கண்ணீர்விட்ட சிறுமியின் அழுகை ராகுல் காந்தியை கண்கலங்க வைத்துவிட்டது. இந்த உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, அங்கு 3 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து கடந்த 11-ம் தேதி கேரளா சென்றார். திருவனந்தபுரத்தில் பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் நடைப்பயணம் மேற்கொண்டார். கேரளாவில் 400 கி.மீட்டர் தூரத்தை கடந்து, மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை நிறைவு செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த 29-ம் தேதி நீலகிரி மாவட்டம், கூடலூருக்கு வந்தார். 21-வது நாளான கூடலூரில் 6 கிமீ தூரம் பாதயாத்திரை நடத்திய ராகுல் காந்தி, பின்னர் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இதையடுத்து, கர்நாடகாவில் பாதயாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். அங்கு கரோனாவால் உறவுகளை இழந்தவர்களை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, பிரதிக் ஷா என்ற சிறுமி ராகுல் காந்தி முன்னிலையில் பேசினார். "என்னுடைய அப்பா உயிருடன் இருந்தபோது நான் அவரிடம் எதையும் வாங்கிக் கொள்வேன். தற்போது என் அப்பா இறந்து விட்டார். கரோனா சமயத்தில் அப்பாவுக்கு சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை.

அவர் இருக்கும்போது எனக்கு பென்சில் வாங்கித்தருவார். ஆனால் இப்போது என் அம்மாவால் எனக்கு எதுவும் வாங்கித்தர முடியவில்லை. அம்மாவுக்கு அரசு வேலை கொடுத்தால், கல்வியைத் தொடர எனக்கு உதவி வழங்கப்பட்டால் நான் மருத்துவராக விரும்புகிறேன். மருத்துவ அலட்சியத்தால் என் அப்பாவை இழந்தேன். நான் டாக்டராகி சேவை செய்ய விரும்புகிறேன்" என்று உருக்கமாக பேசினார். இந்தப் பேச்சால் ராகுல் காந்தி, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா மற்றும் அங்கிருந்த அனைவரும் கண்கலங்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ``பிரதமரே, பாஜக அரசின் கோவிட் நிர்வாகக் குறைவால் தந்தையை இழந்த பிரதிக் ஷாவைக் கேளுங்கள். அவர் தனது கல்வியைத் தொடரவும், தனது குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அரசாங்கத்தின் ஆதரவைக் கோருகிறார். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைக்க வேண்டாமா? அவர்களின் உரிமையை ஏன் மறுக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in