‘போகாதீர்கள்... பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’- ஹர்திக்கைச் சமாதானப்படுத்த ராகுல் முயற்சி!

ஹர்திக் படேல்
ஹர்திக் படேல்

குஜராத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அம்மாநில காங்கிரஸுக்குள் ஏற்பட்டிருக்கும் கலகத்தின் தீவிரத்தை, கட்சித் தலைமை இப்போதுதான் உணரத் தொடங்கியிருக்கிறது. கட்சிக்குள் தான் ஓரங்கப்பட்டப்படுவதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டிவந்த ஹர்திக் படேல், கட்சியிலிருந்தே விலகலாம் எனத் தகவல்கள் பரவியிருக்கும் நிலையில், இப்போதுதான் அவரைச் சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார் ராகுல் காந்தி.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் ஹர்திக் படேல், கடந்த சில நாட்களாகவே கடும் அதிருப்தியில் இருக்கிறார். தன்னைக் கட்சியிலிருந்து நீக்க சிலர் சதிசெய்வதாகச் சில நாட்களுக்கு முன்னர் அவர் குற்றம்சாட்டியிருந்தார். மாநில காங்கிரஸ் தலைமை தன்னை எந்தக் கூட்டத்துக்கும் அழைப்பதில்லை என்றும், எந்த முடிவு குறித்தும் தன்னிடம் ஆலோசிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கவனத்துக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றதாகவும், கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். படேல் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரி போராட்டங்களை நடத்தியதால் கிடைத்த செல்வாக்கின் அடிப்படையில்தான் அவரைக் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி இணைத்தார். எனினும், மாநிலத் தலைமைப் பொறுப்பை எதிர்பார்த்த ஹர்திக்குக்கு செயல் தலைவர் பதவிதான் கிடைத்தது. இதுவும் முக்கியப் பொறுப்புதான் என்றாலும் கட்சியின் மாநிலத் தலைமை எந்த விஷயம் தொடர்பாகவும் தன்னிடம் ஆலோசிப்பதில்லை எனும் வருத்தமும் அவருக்கு இருந்தது.

ஹர்திக் படேல்
ஹர்திக் படேல்

இந்தச் சூழலில், அரசியல் ரீதியாக பாஜக எடுத்த முடிவுகளைப் பாராட்டிய அவர், அக்கட்சி வலிமையுடன் இருப்பதால்தான் அப்படியான முடிவுகளைத் துணிந்து எடுக்கிறது என்றும் புகழ்ந்தார். காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்டது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது போன்றவற்றை முன்வைத்து பாஜகவைப் பாராட்டினார். இதையடுத்து, அவர் பாஜகவில் சேரக்கூடும் என ஊகங்கள் எழுந்தன. எனினும் அதை அவர் மறுத்துவிட்டார். மாநிலத் தலைமையுடன் தான் தனக்குப் பிரச்சினை என்றும், ராகுல் காந்தியுடனோ, பிரியங்கா காந்தியுடனோ தனக்குப் பிணக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் நேர்மையான, வலிமை வாய்ந்த தலைவர்கள் அவசியம் என்றும், அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆம் ஆத்மி கட்சியில் அவர் இணையலாம் என்றும் தகவல்கள் பரவின. அவரை வரவேற்பதாக ஆம் ஆத்மி கட்சியும் கூறியிருந்தது. ஆனால், அதையும் அவர் மறுத்துவிட்டார். இதற்கிடையே, தனது ட்விட்டர் கணக்கின் சுயவிவரப் பக்கத்தில் காங்கிரஸ் எனும் பெயரை அவர் அகற்றியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பலர் முன்னதாக ட்விட்டர் சுயவிவரப் பக்கத்தில் காங்கிரஸில் தாங்கள் அங்கம் வகிப்பது குறித்த தகவலை நீக்கினர் என்பதால், விரைவில் ஹர்திக் காங்கிரஸைவிட்டு விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்தச் சூழலில்தான் ராகுல் காந்தி ஹர்திக்கைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். கட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அவரைக் கேட்டுக்கொண்ட ராகுல், ஹர்திக்குடன் பேசி பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளுமாறு குஜராத் காங்கிரஸ் பொறுப்பாளர் ரகு சர்மாவிடமும், மாநில காங்கிரஸ் தலைவர்களிடமும் அறிவுறுத்தியிருக்கிறார்.

ஹர்திக்கை ராகுல் தொடர்புகொண்டு பேசியது உண்மைதான் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரண்தீப் சுர்ஜேவாலா உறுதிசெய்திருக்கிறார். எனினும், இதுகுறித்த விரிவான தகவல்களை ரகு சர்மாவே வெளியிடுவார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in