“அமலாக்கத் துறை, சிபிஐ தரும் அழுத்தம்... மோடிக்கு ஏன் செவிசாய்க்க வேண்டும்?” - ராகுல் காந்தி பதிலடி!

“அமலாக்கத் துறை, சிபிஐ தரும் அழுத்தம்... மோடிக்கு ஏன் செவிசாய்க்க வேண்டும்?” -  ராகுல் காந்தி பதிலடி!
ராகுல் காந்தி

பிரதமர் மோடி, சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்திருந்த பேட்டியில், “ராகுல் காந்தி, எதற்கும் செவிசாய்க்காத, நாடாளுமன்ற அவையில் அமர விரும்பாத நபர்” என்று சாடியிருந்தார்.

இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களோரில் நேற்று (பிப்.10) நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “நேற்று ஒரு பேட்டியில், ‘ராகுல் காந்தி எதற்கும் செவிமடுப்பதில்லை’ என மோடி ஜி பேசியிருக்கிறார். அவர் சொன்னதன் அர்த்தம் என்ன தெரியுமா? அதாவது, ‘ராகுல் மீது அமலாக்கத் துறை, சிபிஐ தரும் அழுத்தம் செல்லுபடியாகவில்லை. அவர் பணிய மறுக்கிறார்’ என்று அர்த்தம். நான் ஏன் அவர் சொல்வதைக் கேட்க வேண்டும்?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மத்திய அமைச்சர் அனுராக் தாகுர்
மத்திய அமைச்சர் அனுராக் தாகுர்

இதற்கிடையே, மத்திய அமைச்சர் அனுராக் தாகுரும், “குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, ராகுல் காந்தி நாடாளுமன்ற அவையில் இல்லை. அது மட்டுமல்ல. அவரை நாடாளுமன்றத்தில் பார்க்கவே முடிவதில்லை. அவர் தன் விருப்பம் போல எதையாவது பேசக்கூடிய நபர், நாடாளுமன்றத்திலிருந்து காணாமல்போய்விடும் நபர்” என்று நேற்று கிண்டல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in