4-வது நாளாக ராகுல் காந்தியிடம் விசாரணை: அமலாக்கத்துறை நடவடிக்கையால் கொந்தளிக்கும் காங்கிரஸ்

4-வது நாளாக ராகுல் காந்தியிடம் விசாரணை: அமலாக்கத்துறை நடவடிக்கையால் கொந்தளிக்கும் காங்கிரஸ்

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம் இன்று நான்காவது கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் நான்காவது நாளாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி இன்று காலை 11.05 மணியளவில் ஆஜரானார். இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராக வந்தபோது அவருக்கு சிஆர்பிஎப் படையினர் பாதுகாப்பு வழங்கினர்.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 13 முதல் ஜூன் 15-ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். நான்காவது நாள் விசாரணைக்கு ஜூன் 17 அன்று ஆஜராக அமலாக்கத்துறை அவரிடம் அறிவுறுத்தியது. ஆனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மருத்துவமனையில் கவனித்துக்கொள்ள விரும்புவதால், விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்ததால் ஜூன் 20-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

ராகுல் காந்தி இன்று விசாரணைக்கு ஆஜராக வந்த நிலையில் அமலாக்கத்துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு காங்கிரஸ் அலுவலகம் மற்றும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் பல பகுதிகளில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மற்றும் யங் இந்தியா நிறுவனம் தொடர்பான வழக்குகளில் ராகுல் காந்தியிடம் கடந்த வாரம் மூன்று நாட்களில் மொத்தம் சுமார் 30 மணி நேரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நான்காவது நாளான இன்றும் அவரிடம் விசாரணை நடத்தப்படுவது அரசியல் களத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in