"ஆரத்தழுவிக் கொள்வேன். ஆனால்..” தம்பி வருண் காந்தி குறித்து ராகுல் வெளிப்படை!

வருண் - ராகுல்
வருண் - ராகுல்

”வருண் காந்தியை சந்திப்பேன்; ஆரத் தழுவிக் கொள்வேன். ஆனால் அவரது சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தம்பி வருண் குறித்த கேள்விக்கு பளிச் பதில் தந்திருக்கிறார் அண்ணன் ராகுல் காந்தி.

ராகுல் - வருண் பின்னணி

இந்திரா காந்தியின் புதல்வர்கள் சஞ்செய் காந்தி மற்றும் ராஜிவ் காந்தி. சஞ்செய் காந்தி -மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி. ராஜிவ் காந்தி - சோனியாவின் மகன் ராகுல் காந்தி. விமான் விபத்தொன்றில் சஞ்செய் காந்தி இறந்தார். பிற்பாடு பாதுகாவலர்களால் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையானார். இருவர் இறப்பை தொடர்ந்து, கட்சி, ஆட்சி என ராஜிவ் குடும்பத்தின் ஆளுகைக்கு அனைத்தும் மாறின. குடும்பத்தினுள் எழுந்த கசப்பில் மேனகா விலகி இருந்தார்.

பாஜகவில் இணைந்து அமைச்சரான தாய் மேனகா வழியில் அக்கட்சியின் எம்பியாகவும் வருண் நீடிக்கிறார். ஆனால் தனக்கு உரிய அங்கீகாரம் பாஜகவில் கொடுக்கப்படாததில் கட்சிக்கு எதிராகவும் அவ்வப்போது வருண் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவை வருண் காந்தியின் சுருக்கமான பின்னணி!

தலையை துண்டித்துக்கொள்வேன்

தற்போது இந்திய ஒற்றுமை பயணத்தின் அங்கமாக பஞ்சாப் மாநிலத்தில் நடைபோட்டு வரும் ராகுல் காந்தி, இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் அரிதாக வருண் காந்தி குறித்தும் வாய் திறந்தார். ’பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க வருண் காந்தி முன்வந்தால் வரவேற்பீர்களா?’ என்ற கேள்விக்கு ராகுல் காந்தி அதிரடியாக பதிலளித்தார்.

“பாஜகவில் இருக்3கும் வருண் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பது அவருக்கு சங்கடங்களை ஏற்படுத்தும். மற்றபடி வருண் காந்தியை என்னால் எளிதில் எதிர்கொள்ள இயலும்; சந்தித்தால் ஆரத் தழுவிக் கொள்வேன். ஆனால் என்னால் அவர் பின்பற்றும் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் ஆர்எஸ்எஸ் கொள்கையை பின்பற்றுகிறார். என்னால் ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்கு செல்ல முடியாது. அப்படி செல்வதென்றால் தலையை துண்டித்துக்கொள்வேன்” என்று பதிலளித்தார் ராகுல் காந்தி.

தாய் மேனகா காந்தி, மகன் வருண் காந்தி இருவரும் பாஜகவிலிருந்து ஓரம் கட்டப்பட்டிருப்பதாகவும், பாஜக அதிருப்தியில் தங்கள் முகாமை மாற்ற விரும்புவதாகவும் அண்மைக் காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இருவரில் மேனகா காந்தி ஒருவாறாக, விலங்கு நல ஆர்வலர் என்ற தனக்குப் பிரியமான பாதையில் திரும்பி விட்டார்.

அண்ணன் - தம்பி: அரசியல் ஆருடம்

இளம் வயது அரசியல்வாதியான வருண் காந்தி எதிர்காலம் இருண்டவராக தவித்து வருகிறார். தனது வருத்தத்தை பதிவு செய்யும் வகையிலும், பாஜக தலைமையின் கவனத்தை ஈர்க்கவும், கட்சிக்கு எதிராகவே அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டு வந்தார். அவை பாஜக தலைமையை மேலும் சீண்டவே வருண் அமைதி காத்து வருகிறார்.

இதற்கிடையே ஆட்சியில் இல்லாது, கட்சியை மீள்கட்டமைக்கவும் தடுமாறி வரும் ராகுல் காந்தியுடன் வருண் குடும்பபூர்வமாக கலந்து வருவதாகவும், விரைவில் வருண் காந்தி காங்கிரஸில் கலக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் ஆருடங்கள் கிளம்பின. ’காந்தி’ குடும்பத்தை மட்டுமே நம்பியிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, இரட்டைக்குழல் துப்பாக்கியாக அண்ணன் - தம்பி இருவரும் இணைவது சாதகம் என்றே சொல்லப்படுகிறது.

இவற்றின் மத்தியில் வருண் காந்தி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ராகுல் தனது வழக்கமான பாணியில் வெளிப்படையாக தற்போது பதிலளித்துள்ளார். ராகுலை விட வருண் காந்தி 10 வருடங்கள் வயதில் இளையவர் ஆவார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in