ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவியை இழக்க நேரிடும்: பாஜக எம்.பி பரபரப்பு

ராகுல் காந்தி
ராகுல் காந்திஅதானியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார்

மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து நாடாளுமன்றத்திற்கு புறம்பாக கருத்து தெரிவித்ததற்காக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் மக்களவை உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி குறித்த கருத்துக்காக ராகுல் காந்திக்கு எதிராக சிறப்புரிமை மீறல் நோட்டீஸைத் பாஜக எம்.பிக்களான நிஷிகாந்த் துபே மற்றும் பிரஹலாத் ஜோஷி ஆகியோர் தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இது தொடர்பான பதிலை புதன் கிழமைக்குள் சமர்ப்பிக்குமாறு ராகுல் காந்தியை மக்களவைச் செயலகம் நேற்று கேட்டுக் கொண்டது.

இது குறித்துப் பேசிய நிஷிகாந்த் துபே, "சபாநாயகருக்கு நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல், பிரதமருக்கு எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நீங்கள் எழுப்ப முடியாது. பிப்ரவரி 15-ம் தேதிக்குள் தனது கருத்து குறித்த ஆதாரத்தை சபாநாயகரிடம் சமர்ப்பிக்குமாறு நோட்டீஸில் கேட்டுக் கொண்டுள்ளோம். பிரதமருக்கு எதிரான கருத்திற்காக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும், தவறினால் அவர் மக்களவையில் தனது இடத்தை இழக்க நேரிடும்" என தெரிவித்தார்.

பிப்ரவரி 8-ம் தேதி, நிஷிகாந்த் துபே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு தவறாக வழிநடத்தும். இது நாடாளுமன்றத்திற்கு விரோதமான, கண்ணியமற்ற மற்றும் குற்றம்சாட்டும் தன்மை கொண்டவை. ராகுல் காந்தி, ஆவண ஆதாரங்களைத் தருவதாகச் சபையில் அறிக்கை அளித்த போதிலும், அவர் ஆவணம் எதையும் சமர்ப்பிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்த நிலையில், அதானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து கடந்த வாரம் ராகுல் காந்தி மக்களவையில் கடுமையான தாக்குதலை முன்வைத்தார். அதில், அதானிக்கு சாதகமாக சில துறைகளில் விதிகள் மாற்றப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டினார். 2014ல் உலகப் பணக்காரர் பட்டியலில் 609 வது இடத்திலிருந்த அதானி இரண்டாவது இடத்திற்கு உயர்ந்தது எப்படி எனவும் அவர் கேள்வியெழுப்பினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜகவினர் மக்களவைக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in