சர்ச்சை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு

ராகுலின் அருகில் நிற்கும் ஜார்ஜ் பொன்னையா
ராகுலின் அருகில் நிற்கும் ஜார்ஜ் பொன்னையா

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. மூன்றாவது நாளாக அவர் இன்று குமரிமாவட்டத்தில் நடைபயணம் செய்துவருகிறார். இதில் பல்வேறுதரப்பட்ட சமூக ஆர்வலர்களையும் சந்தித்து வருகிறார். அதில் சர்ச்சைக்குரிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை ராகுல் காந்தி சந்தித்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த ஜார்ஜ் பொன்னையா?

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு ஜூலை 18-ல் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த பாதிரியார் ஸ்டோன்சுவாமி நினைவஞ்சலி கூட்டத்தில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை அருமனை போலீஸார் கைது செய்திருந்தனர். இந்து மத உணர்வுகளைப் புண்படுத்திப் பேசியதாக ஜார்ஜ் பொன்னையா ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டுவந்த நிலையில் மதுரை கருப்பாயூரணி பகுதியில் வாகன தணிக்கையின் போது கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா, உயர் நீதிமன்ற கிளையில் சில மாதங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “ மக்கள் நிலத்தை பூமித்தாயாக வணங்கி வருகின்றனர். மனுதாரர் கூட்டத்தில் பேசும்போது பூமித்தாயை அவதூறாகப் பேசியுள்ளார். இந்து மதத்தினரின் மத நம்பிக்கையைத் தவறாகப் பேசியுள்ளார். இரு மதங்களுக்கு இடையில் மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

மனுதாரர் பேசிய கூட்டம் அனுமதி பெற்று நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தால் கரோனா தொற்று பரவல் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மத்தியிலும் அவர் பேசவில்லை. எனவே, மனுதாரர் மீதான இபிகோ 269, 143, 506(1) மற்றும் தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டப்பிரிவு 3-ன்கீழ் வழக்குப் பதிவு செய்தது செல்லாது. இதனால் இப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

மத நம்பிக்கையை சீர்குலைத்தல், இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குதல், பிரிவினையைத் தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இபிகோ 295(ஏ), 153(ஏ) மற்றும் 505(2) பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தது செல்லும். இப்பிரிவுகளை ரத்து செய்ய முடியாது.”என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, ‘தமிழகத்தில் திமுக ஆட்சி மலர கிறிஸ்தவர்களே காரணம். திமுக ஆட்சி நாங்கள் போட்ட பிச்சை’ என்றதோடு, நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி பூமித்தாயை மதிப்பதாகச் சொல்லி செருப்பு போடாமல் இருப்பது, மனோதங்கராஜ் இந்து ஆலயங்களுக்குச்செல்வது என பலவற்றையும் விமர்சனம் செய்தது சர்ச்சையானது. இந்நிலையில் குமரி வந்திருக்கும் ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி, வழக்கு நடவடிக்கையில் சிக்கிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவையும் சந்தித்து உரையாடியுள்ளார். பாதிரியார்கள் சிலரிடம் இன்று உரையாடல் நடத்திய ராகுல் காந்தி, அதில் சர்ச்சையில் சிக்கிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவிடம் கேள்வி கேட்டு பதில் சொல்லும் வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in