'உள்ளூர் தலைவர்கள் எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசிக்கும் ஒரு வாசிப்பாளர்தான் ராகுல் காந்தி. அவரை நாங்கள் தலைவராகவே கருதவில்லை' என்று தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமா ராவ் கூறியுள்ளார்.
தெலங்கானா அமைச்சரும், மாநில முதல்வரின் மகனுமான கேடிஆர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: 'ராகுல் காந்தி எந்த ஒரு முன்தயாரிப்பும் செய்யாமல் உள்ளூர் தலைவர்கள் எழுதிக் கொடுப்பதை வாசிக்கும் ஒருவர். அவரை நாங்கள் தலைவராகவே கருதவில்லை. அவர் ஒரு வாசிப்பாளர், அவ்வளவே. எழுதிக் கொடுத்தவற்றை வாசித்துவிட்டுச் செல்கிறார். அதில் என்ன எழுதிப்பட்டிருக்கிறது என்று கவனம் செலுத்துவதில்லை.
தெலங்கானாவில் ஊழல் பெருத்துவிட்டதாக ராகுல் காந்தி சொல்கிறார். அவர்களின் தெலங்கானா மாநிலத் தலைவர் (ரேவந்த் ரெட்டி) தாவூத் இப்ராஹிம், சார்லஸ் சோப்ராஜ் போன்றவர்களை விட மோசமானவர். ராகுல் காந்தி ஓர் அப்பாவி. அதனால் அவருக்கு இது தெரியாது. முதலில் நாங்கள் யாருக்கும் பி-டீம் இல்லை. நாங்கள் தெலங்கானா மக்களின் ஏ டீம். காங்கிரஸ்தான் சி டீம், அதாவது சோர் (திருடர்கள்) டீம்" என்று சாடினார்.
முன்னதாக, தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் முக்கியத் தலைவரும், வயநாடு எம்,பி.யுமான ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தபோது, "இந்தத் தேர்தலில் கேசிஆர் தோல்வியைத் தழுவுவார் என்று நான் நினைக்கிறேன். இந்தத் தேர்தலில் டோரலா (நிலப்பிரபுக்கள்) தெலங்கானாவுக்கும், பிரஜலா தெலங்கானாவுக்கும் (பொதுமக்கள்) தான் போட்டியே நடக்கிறது. அதாவது ராஜாவுக்கும் பிரஜைகளுக்கும் இடையிலான போட்டி இது.
இந்த பத்தாண்டு கால ஆட்சியில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகரராவ் தொடர்ந்து மக்களிடமிருந்து விலகியே நின்றிருக்கிறார். மாநிலத்தின் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது. அனைத்து அதிகாரங்களும் ஒரு குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது.
நான் பாஜகவிற்கு எதிராக போராடி வருகிறேன். ஆதலால்தான் என் மீது ஏகப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. என்னுடைய உறுப்பினர் பதவியை பறித்துக் கொண்டனர். என் வீட்டையும் எடுத்துக் கொண்டனர். உங்கள் முதல்வர் சந்திரசேகர ராவ், பாஜகவை மறைமுகமாக ஆதரித்து வருகிறார். அதனால்தான் அவர் வீட்டில் சிபிஐ, அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துவதில்லை. ஓவைசியின் எம்.ஐ.எம் கட்சிகூட நாடு முழுவதும் தேர்தல்களில் பங்கேற்று பாஜகவிற்கு ஒத்துழைக்கிறது" என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 30-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜகவும், காங்கிரஸும் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், பிஆர்எஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் இருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!
செம மாஸ்... நடுரோட்டில் தெறிக்க விட்ட ரஜினி... வைரலாகும் வீடியோ!
பிரபல நடிகை சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு! திரையுலகில் பரபரப்பு!
நாளை விண்ணில் பாய்கிறது 'ககன்யான்' சோதனை விண்கலன்... தொடங்கியது கவுண்டவுன்!
லெஸ்பியன்னு சொல்லு... கெத்தா இருக்கும்; சர்ச்சைக் கிளப்பும் ட்ரைலர்!