வயநாடு தொகுதியில் போட்டியிட இ.கம்யூனிஸ்ட் கட்சி திட்டம்... ராகுல் காந்திக்கு சிக்கல்!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இந்தமுறை ராகுல் போட்டியிடுவதில் இந்தியா கூட்டணிக்குள் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தலைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.  சில கட்சிகள் பேச்சுவார்த்தைகளை முடித்து களத்தில் பணியாற்றி வருகின்றன. 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த முறை போட்டியிட்ட கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் இந்த முறையும் போட்டியிடத் தயாராகி வருகிறார். அப்படி அவர் போட்டியிட்டால் அங்கு அவருக்கு நிலைமை மிகுந்த சாதகமாகவே இருக்கிறது.

கடந்தமுறை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை அவர் பெற்றார். இந்த முறையும் அதே அளவுக்கான வெற்றியைத் தர அங்குள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். 

வயநாடு
வயநாடு

ஆனால், இந்தியா கூட்டணியில்  வயநாடு தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலுக்கட்டாயமாக கேட்டு வருகிறது.  கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான்கு இடங்களை ஒதுக்க அங்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. அதில் ஒரு தொகுதியாக வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்க விரும்புகிறது.

அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலுவான கட்டமைப்பு இருப்பதால் அந்த தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளது. கடந்த 2009, 2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில் அந்த கட்சியின் வேட்பாளர் இரண்டாம் இடம் பிடித்தார். இதனால்  தொகுதியை இந்தமுறை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. 

மேலும் இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாதர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும், டி.ராஜாவின் மனைவியுமான அன்னி ராஜாவை போட்டியிட வைக்கும் முனைப்பில் அந்த கட்சி செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில் வயநாடு தொகுதியை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி விட்டு கொடுக்கும் சூழல் உருவாகலாம் எனத் தெரிகிறது.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில்  பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம்  ராகுல் காந்தி தோற்றுப்போன நிலையில் அவருக்கு கை கொடுத்த வயநாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டு வருவதால் ராகுல் காந்தி குழப்பத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in