கேம்பிரிட்ஜில் ராகுல் காந்தி -வைரலாகும் புதிய தோற்றம்

கேம்பிரிட்ஜில் ராகுல் காந்தி
கேம்பிரிட்ஜில் ராகுல் காந்தி

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கௌரவ விரிவுரைக்காக சென்றிருக்கும் ராகுல் காந்தியின் புதிய தோற்றம், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, இங்கிலாந்துக்கு ஒரு வாரப் பயணமாக சென்றுள்ளார். அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கௌரவ விரிவுரை உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார். ’லேர்னிங் டு லிஸன் இன் தி 21 செஞ்சுரி’ என்ற தலைப்பில் அவர் அங்கே பேசினார்.

மற்றுமொரு நிகழ்வில் தனது ’பாரத் ஜோடோ யாத்திரை’ மற்றும் ’இந்திய - சீன உறவு’ உள்ளிட்ட தலைப்புகளிலும் பேசுகிறார். இவற்றுக்கு அப்பால் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார். ராகுல் காந்தியின் இங்கிலாந்து பயணம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பங்கேற்புகள் ஆகியவற்றை விட அவரது புதிய தோற்றமே சமூக ஊடகங்களில் சிலாகிக்கப்பட்டு வருகிறது.

ராகுல் - புதிய தோற்றம்
ராகுல் - புதிய தோற்றம்

பாரத் ஜோடோ பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியதற்கும் ஸ்ரீநகரில் அதனை முடித்ததற்கும் இடையே அவரது முகம் வெவ்வேறாக உருவெடுத்தது. அரசியல் புள்ளிகள் தங்களது தோற்றம் மற்றும் உடுப்புகளில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். ஆனால் ராகுல் காந்தி மழிக்கப்படாத முகவும், ஒரே மாதிரியான வெண்ணிற மேலாடையுமாக பாத யாத்திரை முழுக்க வலம் வந்தார்.

பாத யாத்திரை - ராகுல் காந்தி
பாத யாத்திரை - ராகுல் காந்தி

குறிப்பாக தனது தாடியை அதன் போக்கில் விட்டிருந்தார். இது பாஜகவினரின் பகடிக்கும் ஆளானது. ஈராக் தேசத்தின் முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளர் சதாம் உசேன் போலிருக்கிறது என்றெல்லாம் கிண்டல் செய்தார்கள். ஆனால் அந்த தோற்றத்துடனே பாத யாத்திரையை முடித்தவர், நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் பங்கேற்று உரையாற்றினார்.

பாஜகவினரால் பழிக்கப்பட்ட ராகுல் காந்தியின் தாடி தோற்றம், இளைஞர்கள் மத்தியில் புதிய ஸ்டைல் ஆகவும் மாறியது. அதற்கு ராகுலின் பெயர் சூடப்பெற்று, அந்த தோற்றத்துடன் கணிசமான இளைஞர்கள் உலவினார்கள். இதற்கிடையே தனது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஜயத்தை முன்னிட்டு தாடி துறந்திருக்கிறார் ராகுல் காந்தி. மேலும் தலைக்கேசத்தையும் ட்ரிம் செய்து, ஆளே மாறியும் இருக்கிறார்.

பல்கலைக்கழக மாணவர்கள் ராகுல் காந்தியின் தற்போதைய தோற்றத்துடன் செல்ஃபி எடுத்து அதனை சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர். இது தவிர ராகுல் காந்தியை வரவேற்கும் வகையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பிலான பதிவில் இடம்பெற்றிருந்த ஒரு புகைப்படமும் அதிகம் விதந்தோதப்படுகிறது. ராகுல் காந்தியின் அந்த புகைப்படம் அசப்பில் அவரது தந்தை ராஜிவ் காந்தியை நினைவூட்டியதே அதற்குக் காரணம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in