
ராகுல் காந்தி தனது தனிப்பட்ட பயணமாக இத்தாலி கிளம்பியதற்கு, எதிர்க்கட்சிகள் விமர்சனம் மட்டுமன்றி உட்கட்சியில் சலசலப்பும் கிளம்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி திடீர் பயணமாக இத்தாலி தேசத்தின் மிலனுக்கு நேற்று(டிச.29) கிளம்பிச் சென்றார். புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ராகுல் வெளிநாடு பயணம் மேற்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததை அடுத்து, அவர்களுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தியின் குறுகிய வெளிநாட்டுப் பயணம் என்பது முழுக்கவும் தனிப்பட்ட பயணம் என்றும் இதில் அரசியல் விமர்சனங்களுக்கு இடமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தியின் தற்போதைய பயணம் முன்கூட்டியே திட்டமிடப்படாத பயணமாக தெரிகிறது. ஜன.5 அன்று பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவுக்கான தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். விவசாயிகள் போராட்டம் மற்றும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதல் ஆகியவற்றுக்குப் பின்னர், பஞ்சாபில் மோடி பங்கேற்கும் அரசியல் நிகழ்வு என்பதால், அங்கே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதற்கு சற்று முன்பாக ஜன.3 அன்று மோகாவில், ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான பணிகள் நடைபெற்று வந்த வேளையில் ராகுல் காந்தி திடீர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல்கள் குறித்த அறிவிப்பு அண்மையில்தான் வெளியானது. மீண்டும் ராகுல் காந்தி கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பார் என்ற பேச்சும் கட்சியினர் மத்தியில் பெரிதாக விவாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் ராகுல் வெளிநாடு பறந்திருப்பது, காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் சலசலப்பு எழச் செய்துள்ளது.
மோடிக்கு முன்னதாக ராகுல் காந்தி பங்கேற்கும் பஞ்சாப் நிகழ்ச்சிகள், மோடிக்கு எதிரான அறைகூவல்களை பஞ்சாபில் பதிவு செய்யும் என்று காங்கிஸார் இறுமாந்திருந்தனர். ஆனால் ராகுலின் திடீர் முடிவு காரணமாக, மோகா கூட்ட ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி வரிசையிலும், ராகுல் காந்தியின் திடீர் வெளிநாட்டுப் பயணம் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.
ராகுல் காந்தியும் அவரது திடீர் வெளிநாட்டுப் பயணங்களும் பிரிக்க முடியாதவை. அண்மையில் முடிவடைந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாகவும் இப்படியொரு வெளிநாட்டுப் பயணமாக இங்கிலாந்து சென்றவர், அங்கு ஒருமாத காலம் செலவழித்த பின்னர் நாடு திரும்பினார். இதே போல மகாராஷ்டிரா, ஹரியாணா தேர்தலுக்கு முன்னரான பாங்காங் பயணமும் விமர்சனத்துக்கு ஆளானது. 2014 மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, சுமார் 2 மாத காலம் அவர் வெளிநாடுகளில் செலவழித்தார்.
இந்தப் பயணங்கள் அனைத்துமே ராகுல் காந்தியின் தனிப்பட்ட பயணங்கள் என தெளிவுபடுத்திய பின்னரும் அவை அரசியல் மேடைகளில் விமர்சனத்துக்கும், அவதூறுக்கும் ஆளாகி இருக்கின்றன. அவற்றில் வலம் வந்த வதந்திகள் ஏராளம். 5 மாநிலத் தேர்தல் மற்றும் அவற்றையொட்டி அரசியல் வியூகங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் திடீர் இத்தாலி பயணமும் வதந்திகளுக்கு ஆளாகி இருக்கிறது. இவை தேர்தல் பிரச்சார மேடைகளிலும் எதிரொலிக்கக் கூடும் என்பதால், அவற்றை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸார் புலம்பி வருகின்றனர்.