'விரைவில் நல்ல செய்தி வரும்' - ராகுல் காந்தி நம்பிக்கை

'விரைவில் நல்ல செய்தி வரும்' - ராகுல் காந்தி நம்பிக்கை

ராஜஸ்தான் காங்கிரஸில் நிலவும் உட்கட்சி பூசல்களுக்கு மத்தியில், அல்வாரில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்ததும், 'விரைவில் நல்ல செய்தி வரும்' என்று செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அசோக் கெலாட்டுக்கும் அவரது போட்டியாளரான சச்சின் பைலட்டுக்கும் இடையே ராஜஸ்தானில் உட்கட்சி மோதல் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. சமீபத்தில் சச்சின் பைலட்டை 'துரோகி' என்று அசோக் கெலாட் அழைத்தது பரபரப்பை பற்றவைத்தது.

தற்போது ராஜஸ்தானில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் தலைவர்கள் இருவரையும் ராகுல் காந்தி சமரசப்படுத்தும் முயற்சியாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் உடனிருந்தார்.

பைலட் மற்றும் கெலாட் இருவரும் பல ஆண்டுகளாக கசப்பான போட்டியாளர்களாக இருந்து வருகின்றனர். 2020-ல் முதல்வர் கெலாட்டின் தலைமைக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதால் நிலைமை மோசமானது. அதன்பிறகு தற்போது காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிட இருந்த சூழலில், சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பொறுப்பை வழங்கக்கூடாது என்று கெலாட்டுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி அதிர்ச்சியளித்தனர்.

இந்த பரபரப்பான சூழலில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டை ராகுல் காந்தி இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நீடித்தது, அதன் பிறகு ராகுல் காந்தி அந்த இடத்தை விட்டு பாரத் ஜோடோ முகாமுக்குச் சென்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in