குமரி மாவட்ட இணைப்புப் போராட்டத் தியாகியை நேரில் அழைத்து உரையாடிய ராகுல் காந்தி

குமரி மாவட்ட இணைப்புப் போராட்டத் தியாகியை நேரில் அழைத்து உரையாடிய ராகுல் காந்தி

கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி குமரிமாவட்ட இணைப்புப் போராட்டத் தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லாவை நேரில் அழைத்து நீண்ட நேரம் உரையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திருத்தமிழ்ப் போராட்டத் தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா காமதேனு இணையத்திடம் கூறுகையில், “நான் கடந்த ஓராண்டாகவே வீட்டை விட்டு வெளியிலேயே செல்வதில்லை. வயோதிகத்தால் முன்புபோல் நடக்கமுடியவில்லை. இந்நிலையில் தான் ராகுல்காந்தி திருத்தமிழக போராட்ட இணைப்புத்தியாகி என்னும் முறையில் என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். என்னை அழைத்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம், நான் வீட்டை விட்டே வெளியே வரமுடியாத நிலையில் முடங்கியிருப்பதைச் சொன்னேன்.

உடனே இன்று காலையில் அவர்களே ஒரு கார் அனுப்பியதோடு, என்னை கார் வரை அழைத்துச் செல்லவும், காரில் இருந்து இறங்கி அழைத்துச் செல்லவும் வீல்சேரையும் அனுப்பிவைத்தனர். ராகுல் பத்து நிமிடங்கள் என்னிடம் பேசினார். என் கருத்தை ஆழமாகக் கேட்டார். சாதி, மதம், இனம் கடந்து இந்த நாட்டை உருவாக்கத் தியாகிகள்பட்ட சிரமங்களை அவரிடம் நினைவுகூர்ந்தேன். இப்படி உருவான நாட்டை எப்படி பிளக்க அனுமதிக்க முடியும் எனக் கேட்டேன். அதனால் ராகுலின் முயற்சிக்கு துணை நிற்போம் எனவும் சொன்னேன். உடனே ராகுல் காந்தி, 'இந்த தள்ளாத வயதிலும் உங்களின் உற்சாகத்தைப் புரிந்துகொள்கிறேன். நாட்டு மக்களை பிளவுபடுத்தும் சக்திகளை வீழ்த்துவோம்' என்று சொன்னார். சமூக நல முன்னணி என்னும் அமைப்பின் இனாமல் ஹசன் மொழிபெயர்பு செய்தார் ”என்றார்.

குமரி மாவட்டம், கேரளத்தில் இருந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பின்பு தாய் தமிழகத்துடன் இணைந்தது. இந்நிலையில் ராகுல் காந்தி குமரிமாவட்டத்திற்கு வந்து நடைபயணம் செய்கையில் தியாகிகளைச் சந்திக்க முடியுமா எனக் கேட்டது தியாகிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in