
தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி மகன் திருமணம் இன்று நடைபெற்றது. மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நிகழ்வில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்," ஆளுநர் மாளிகைக்கு முன் நடந்த சம்பவத்திற்கு கண்டிப்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் காவல்துறையைப் பொறுத்த வரை, இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என்பதே மதிமுகவின் நிலைப்பாடு" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், " மத ரீதியாக, சாதி ரீதியாக தேவையில்லாத சர்ச்சைகளை பாஜக கிளப்புகிறது. இதன் காரணமாக இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட வாய்ப்பு உள்ளது. ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கு அவதூறு பரப்பும் வகையில் நடந்து கொள்கிறார். சமீபத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இங்கு அங்கீகாரம் இல்லை எனச் சொல்லியிருக்கிறார். மருது பாண்டியர் நினைவு நாள் அன்று அமைச்சர்கள் ஐந்து பேர் மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். மருது சகோதரர்களுக்கு சிலை எழுப்பி இருக்கிறார்கள்.
நாட்டிற்காக உழைத்த விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதையை இந்த அரசு செய்து இருக்கிறது. அப்படி இருக்கும்போது, ஆளுநர் இப்படி கூறி இருக்கிறார்" என கேள்வி எழுப்பினார்.
சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யா வெள்ளையனை வெளியேற்ற 9 வருடம் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். அதனால் அவரால் கல்வி பெற முடிவில்லை. கல்லூரிக்குப் போக முடியவில்லை. தன் வாழ்க்கையையே தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் கொடுக்க ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களான கேரளா, மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் மாநில அரசுக்கு இடையூறு செய்கிற மாதிரி திட்டங்களைச் செயல்படுத்த முடியாத மாதிரி நடந்து கொள்கிறார்கள்.
ஆரியத்தை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று அண்ணாமலை கூறி இருக்கிறார். அண்ணாமலை கூறுவதுபோல் சொன்னால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைதான் குப்பையில் போட வேண்டும். ஏனென்றால், ஆரிய சர்ச்சையைக் கொண்டு வந்தது இவர்கள்தான். ஆயிரம் வருடத்திற்கு முன்னரே திராவிடம் வந்து விட்டது. தமிழ் மொழி பேசுபவர்கள், தென்னிந்தியாவில் வாழ்கிறவர்கள், திராவிடர்கள். மதிமுகவைப் பொறுத்த அளவிற்கு, பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியைத்தான் நாங்கள் பார்க்கிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் கூறியது போல் யார் வெற்றி பெற வேண்டும் என்பது அல்ல, யார் வெற்றி பெறக் கூடாது என்பதுதான். 2024 மக்களவைத் தேர்தலில் நிற்க தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பம் கிடையாது. கட்சி தலைமை தொண்டர்களின் முடிவுதான் என் முடிவு" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை
நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!
3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!
5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!