``தொழிலதிபர் அதானிக்காக 24 மணி நேரமும் உழைக்கிறாா் பிரதமர் மோடி. அதனால் இனி பாரத் மாதா கி ஜே என்று சொல்ல வேண்டாம், அதானி கீ ஜே என்றுதான் சொல்ல வேண்டும்" என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸும், அக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
புந்தி, தெளசா ஆகிய பகுதிகளில் காங்கிரஸுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார். "பாரத் மாதா கீ ஜே' என்று அடிக்கடி கூறும் பிரதமர் மோடி, 24 மணிநேரமும் அதானிக்காக உழைக்கிறார். எனவே, 'அதானி கீ ஜே' என்றுதான் இனி அவர் முழங்க வேண்டும். ஏழை மக்களுக்காக ஒரு தேசம், அதானிக்காக ஒரு தேசம் என இருவேறு இந்தியாவை உருவாக்க பிரதமர் விரும்புகிறார்.
ராஜஸ்தானில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், முதல் பணியாக நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்படும். அதன் பிறகே, இந்தியத் தாயின் வெற்றி தொடங்கும்.
நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் (ஓபிசி) எண்ணிக்கை குறித்து நான் கேள்வியெழுப்பினால், பிரதமர் மோடி வேறு விஷயங்களைப் பேசத் தொடங்குகிறார். நாட்டிலுள்ள ஒரே ஜாதி ஏழைகள்தான், வேறெந்த ஜாதியும் இல்லை என்று பிரதமர் கூறுகிறார். அப்படியென்றால், தன்னை ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என்று அவர் அடையாளப்படுத்திக் கொள்வது ஏன்?
ரூ.12,000 கோடி செலவில் விமானம் வாங்க உங்களால் (மோடி) முடிகிறது. ஒரு நாளுக்கு மூன்று முறை உடைகளை மாற்றுவதோடு, ரூ.12 கோடி மதிப்பிலான காரில் பயணிக்க முடிகிறது. ஆனால், ஓபிசி, தலித், பழங்குடியின இளைஞர்கள், தங்களின் உண்மையான எண்ணிக்கையை அறிந்துகொள்ள விரும்பினால், ஜாதியே இல்லை என்று கூறி மறுத்து விடுகிறீர்கள்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான எனது பாரத ஒற்றுமை நடைபயணத்தின்போது, ஓபிசி, தலித் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் மத்தியில் ஐஏஎஸ் அதிகாரிகளாக வர வேண்டுமென்ற விருப்பம் இருப்பதை அறிந்துகொண்டேன். 90 ஐஏஎஸ் அதிகாரிகளின் மூலம் நாட்டை நிர்வகிக்கிறார் பிரதமர் மோடி. அவர்களில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள்.
நாட்டில் சுமார் 50 சதவீதம் அளவுக்கு உள்ள ஓபிசி பிரிவினரின் பிரதிநிதித்துவம் 3 அதிகாரிகள்தான். எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது நாட்டுக்கு மிகவும் அவசியம்" என்று ராகுல்காந்தி வலியுறுத்தி பேசினார்.
இதையும் வாசிக்கலாமே... HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!
துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!
1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!
ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?
பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?