ராகுல் காந்தியும் ஆதித்யா தாக்கரேவும் நாட்டை வழிநடத்தும் திறன் கொண்டவர்கள்: சஞ்சய் ராவத் அதிரடி

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்
சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே ஆகியோர் நாட்டை வழிநடத்தும் திறன் கொண்ட இரு முக்கிய இளம் தலைவர்கள் என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மகாராஷ்டிராவில் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரையில் நேற்று ராகுல் காந்தியுடன் ஆதித்யா தாக்கரேவும் பங்கேற்றார். இது குறித்து பேசிய சஞ்சய் ராவத், "இரண்டு முக்கிய இளம் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் ஆதித்யா தாக்கரே ஆகியோர் பாரத் ஜோடோவுக்காக ஒன்றாக நடப்பார்கள், இது புதிய ஆற்றலை உருவாக்கும். இரண்டு இளம் தலைவர்களும் நாட்டை வழிநடத்தும் திறன் கொண்டவர்கள். அவர்கள் மாநிலத்திற்காகவும் நாட்டிற்காகவும் உழைக்கும் ஆற்றல் மிகுந்தவர்கள்” என்று கூறினார்.

உத்தவ் தாக்கரே மற்றும் வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் ஆகியோர் ஒன்றிணைவது குறித்து கேள்விக்கு பதிலளித்த ராவத், அவர்களின் தாத்தாக்களுக்கு இடையே ஒரு பிணைப்பு இருந்தது, அது இப்போது தலைமுறைகளாக பரவியுள்ளது என்று கூறினார்.

அவர், "பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பிரபோதங்கர் தாக்கரே ஆகியோர் சமயுக்த் மகாராஷ்டிரா இயக்கத்தில் பங்கேற்றனர். பாபாசாகேப் அம்பேத்கர் மராத்தி பெருமை பற்றி வலுவான கருத்துக்களைக் கொண்டிருந்தார்.

பிரபோதங்கர் தாக்கரே மகாராஷ்டிரா இயக்கத்தில் பங்கேற்க பாபாசாகேப் அம்பேத்கரிடம் கோரிக்கை விடுத்தார், அவர் அதை ஏற்றுக்கொண்டார். அம்பேத்கரும் தாக்கரேவும் இரு சக்திகள், அவர்கள் ஒன்றிணைந்தால், நாட்டின் அரசியல் மாறுவதை நீங்கள் காண்பீர்கள்" என்று கூறினார்.

மாநிலத்தில் நிலவும் தற்போதைய சூழல் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை பெரிய சக்தியாக மாற்றும் என்று கூறிய சஞ்சய் ராவத், “எல்லோரும் உத்தவ் தாக்கரேவை நம்புகிறார்கள். குமிழ்கள் வெடிக்கத் தொடங்கிவிட்டன, சிவசேனா அலையை என்னால் பார்க்க முடிகிறது, இது மகாராஷ்டிரா அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். எங்களிடம் இருந்து பிரிந்து சென்ற சிலர் நிச்சயமாக திரும்பி வருவார்கள் என்று நான் நம்புகிறேன்" என தெரிவித்தார்

அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட பணமோசடி வழக்கில் 100 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து, சில நாட்களுக்கு முன்பு ஜாமீன் பெற்று சஞ்சய் ராவத் சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in