
தெலங்கானாவில் பாஜகவின் நான்கு டயர்களையும் காங்கிரஸ் கட்சி பஞ்சராக்கியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசியுள்ளார்.
தெலங்கானாவில் இம்மாதம் 30-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. தேர்தலையொட்டி இந்த கட்சி 115 தொகுதிகளுக்கு அக்கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. ஆனால், பாஜக சார்பில் வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடர் தாமதம் ஏற்பட்டது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக இதுவரை 6,000 பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து உள்ளதாகவும், அதிலிருந்து வேட்பாளர் தேர்வு செய்வதில் தாமதம் என்றும் சொல்லப்பட்டது. கடந்த 22-ம் தேதி 52 பெயர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டது.
கடந்த மாதத்தில் பிரதமர் மோடி தெலங்கானாவுக்கு வந்து பிரசாரத்தை தொடங்கினார். இதனையடுத்து கடந்த 27-ம் தேதியன்று தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
அப்போது அவர் "தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தனது மகன் கே.டி.ராமாராவை முதல்வராக்க நினைக்கிறார். சோனியா அவரது மகன் ராகுலை பிரதமராக நினைக்கிறார். ஆனால், பாஜக வெற்றிபெற்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரையே முதல்வராக நியமிப்போம்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல் காந்தி கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். தெலங்கானாவின் கல்வகுர்த்தியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியில் பங்கேற்று பேசிய அவர், "பாஜக தலைவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றனர். உண்மை என்னவெனில் பாஜகவின் நான்கு டயர்களையும் காங்கிரஸ் இங்கு பஞ்சராக்கியுள்ளது. தெலங்கானாவில் நீங்கள் வெறும் 2 சதவீத ஓட்டுகளைத்தான் பெறுவீர்கள். அப்படி இருக்கும்போது உங்களால் எப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரை முதல்வராக்க முடியும்?
அதிலும் பிரதமர் மோடி, அமெரிக்கா சென்று அங்கு ஓபிசி வகுப்பை சேர்ந்தவரை அதிபராக்குவேன் என்று கூட கூறுவார். இந்த மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சியும், பாஜகவும் ரகசிய உடன்படிக்கையில் இருக்கின்றன. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜகவுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட அரசியல் கட்சியினர் மீது அமலாக்கத்துறை, சிபிஐ ரெய்டு, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. என் மீது கூட 24 வழக்குகள் இருக்கின்றன. என்னுடைய எம்பி பதவி பறிப்பு, அரசு வீடு பறிப்பு கூட பாஜகவால்தான் நடந்தது" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்!
குட்நியூஸ்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
காங்கிரஸில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி!?
அதிர்ச்சி! தொடர் மழை... வெள்ளத்தால் நனைத்து வீணாகிப்போன ரூ.400 கோடி வங்கிப் பணம்!
ஆசைப்பட்டா என்ன தப்பு? ரஜினியின் குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்த விஜய்!