கிரிக்கெட் மற்றும் கராத்தே: சிறாருடன் ராகுல் கலக்கல்!

கிரிக்கெட் மற்றும் கராத்தே: சிறாருடன் ராகுல் கலக்கல்!

இந்திய ஒற்றுமை பயணத்தின் போக்கில் பல்வேறு தரப்பினரும் ராகுல் காந்தியை சந்தித்து அளவளாவியபடி நடைபோட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் ஆங்காங்கே சிறார் சிலரும் குறுக்கிடுவதுண்டு. இவை தொடர்பான சில பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அரசியல் முதல் சினிமா வரை மக்களை ஈர்ப்பதற்கான முனைப்புகளை சிறாரிடம் தொடங்குவது சிறப்பான சந்தை உத்தியாக பாவிக்கப்படுகிறது. இதன் பொருட்டே வணிக விளம்பரங்களிலும் குழந்தைகள் அதிகம் இடம் பெறுகின்றனர். இந்த வகையில் வெற்றிகரமான திரை நட்சத்திரங்கள் பலரும், குழந்தைகள் ரசிப்பதற்கான பாடல் மற்றும் நடனக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தருவதுண்டு. அவ்வாறே வாக்கு அரசியலிலும் தேர்தல் வெற்றிக்கான அறிவிப்புகளில் குழந்தைகள் மற்றும் மாணவர் நலன், முன்னேற்றம் தொடர்பான வாக்குறுதிகள் அதிகம் வெளியாகும்.

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை பயணத்தின் பாதையிலும் குழந்தைகள் பங்கேற்பது அதிகரித்து வருகிறது. அரசியல் பிரமுகர்கள் மட்டுமன்றி கட்சி சாரா சமூக செயற்பாட்டாளர்கள், திரை நட்சத்திரங்கள் இந்த பயணத்தில் அவ்வப்போது இடம்பெறுகின்றனர். பெரியவர்கள் போன்று குழந்தைகளால் தொடர்ந்து நடைபயில்வது சிரமம் என்பதால் ஆங்காங்கே அவர்களுடன் ராகுல் காந்தி சற்று நேரம் ஒதுக்கி அளவளாவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தெலங்கானாவில் தனது பயணத்தை தொடரும் ராகுல் காந்தி அங்கேயும் சிறார் சந்திப்பில் மகிழ்ந்து வருகிறார்.

அப்படி கிரிக்கெட் பந்து மற்றும் மட்டையுடன் குறுக்கிட்ட சிறுவன் ஒருவனுடன் சற்று நேரம் பந்து வீசி விளையாடினார் ராகுல். உடன் சென்ற கட்சி தலைவர்களும் ஃபீல்டிங் செய்து அசத்தினார்கள். கலகலப்பான இந்த நிகழ்வில் ராகுல் காந்தி பாதுகாப்புகாக சூழ்ந்திருந்த பூனை படையினர் சற்று பதட்டத்துக்கு ஆளானார்கள். இதே போன்று கராத்தே தற்காப்பு கலை பயிலும் சிறுவன் ஒருவன் ராகுல் காந்தியிடம் கராத்தே தற்காப்பு கலை நுணுக்கங்களை பரீட்சிக்க முயன்றான். அப்படியான அவனது ’பஞ்ச்’களை பெற்றுக்கொண்ட ராகுல் அவற்றில் சிலவற்றை திருத்தவும் செய்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானபோது, ராகுல் காந்தியின் உடற்பயிற்சி மற்றும் தற்காப்புக் கலை தொடர்பான தகவல்களும், அவற்றின் மீதான ராகுலின் ஆர்வம் குறித்த செய்திகளும் கவனம் பெற்றன. அன்றாடம் உடற்பயிற்சிகளை தீவிரமாக தொடர்ந்து வரும் ராகுல், ஜப்பானிய கராத்தேவான ’அய்கிட்டோ’வில் கறுப்பு பெல்ட் பெற்றவர். கூடுதல் பயிற்சி நுணுக்கங்களை கற்றுக்கொள்வதற்காக ஜப்பானுக்கும் சென்று சில காலம் தங்கி சிறப்பு நுணுக்கங்களை பயின்று வந்திருக்கிறாராம்.

தற்போது ஒற்றுமை பயணத்தை தொடர்ந்து வரும் ராகுல் காந்தி உடல் உறுதியின் பின்னணியில் அவர் பெற்ற தேகப் பயிற்சிகளும் காரணம் என்கிறார்கள். தொடர் நடைபயணத்தின் காரணமாக உடல் மெலிந்து, நரையோடிய குறுந்தாடியுடன் தென்பட்டாலும் களைப்பின்றி அவர் நடைபோட்டு வருகிறார். ஆங்காங்கே பிராந்திய அளவில் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியினர் பயணத்தில் பங்கு பெற்றாலும், ராகுலுடன் தொடர்ந்து நடைபயிலும் கட்சியினர் குறைவு. செப்டம்பர் மாதம் 7 அன்று தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுலின் நடைபயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என தொடர்ந்து தற்போது தெலங்கானா மாநிலத்தில் மையங்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in